மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக மாவட்ட கமிட்டி கூட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மயிலாடுதுறையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட கமிட்டி கூட்டம் இன்று நடைபெற்றது. பூம்புகார் எம்எல்ஏவும், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கட்சி அலுவலகத்திற்குள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது உட்கட்சி மோதல் காரணமாகவும், ஒப்பந்தப் பணிகளை கட்சியினருக்கு கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருதரப்பினர்களாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் ஆதரவாளர்கள் மற்றும் எதிர் தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த திமுகவினர், சாலையில் மோதிக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் ஒரு நிர்வாகி ரத்த கறையுடன் உள்ள வேட்டியில் வெளியே வந்து மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.