பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் திஷா பதானி, தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் கவணம் செலுத்தி வரும் அவர், தற்போது, ஹாலிவுட்டில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பரேலி மாவட்டத்தின் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள திஷா பதானியின் வீட்டில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அந்த வீட்டில் திஷா பதானியின் தந்தை, ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ஜகதீஷ் சிங் பதானி, அவரது தாய் மற்றும் சகோதரி இருந்துள்ளனர். பட வேலை தொடர்பாக திஷா பதானி மும்பையில் தங்கியிருந்தார். செப்டம்பர் 11 அதிகாலை 4:30 மணிக்கு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் திஷா பதானியின் வீட்டை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
சுமார் 10 முதல் 12 ரவுண்டுகள் அந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், ஆனால், நல்வாய்ப்பாக வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரேலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மேலும், சிதறிக் கிடந்த தோட்டாக்களைக் கைப்பற்றி விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இதனிடையே, இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு கனடாவைத் தலைமையாகக் கொண்ட கோல்டி பிரார் கேங் பொறுப்பேற்றிருக்கிறது. அவர்களது மதப் பிரமுகர்களான பிரேமானந்த் மகாராஜ் மற்றும் அனிருதாச்சார்யா மகாராஜ் பற்றி திஷா பதானி மற்றும் அவரது சகோதரி இருவரும் இழிவுபடுத்திப் பேசியதற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு எனத் தெரிவித்துள்ளனர். இதனை அந்தக் கேங்கில் இருக்கும் ரோஹித் கோதரா என்பவர் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “எங்கள் மதத்தைப் பாதுகாக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். தர்மமும் சமூகமும் எங்களுக்கு ஒன்று. அவற்றைப் பாதுகாப்பது எங்களின் முதன்மையான கடமை. இந்தச் சம்பவம் வெறும் டிரெய்லர் மட்டுமே. இன்னொரு முறை யாராவது எங்கள் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசினால், நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். கொலை செய்துவிடுவோம்” என எச்சரித்துள்ளனர். அதோடு, பல்வேறு குற்றப் பின்னணியில் இருக்கும் கேங்ஸ்டர் கும்பலைக் குறிப்பிடும் ஹேஷ்டேக்களை இணைத்து, மத உணர்வுகளுக்கு ஏற்படும் எந்தவொரு அவமானத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என வலியுறுத்திப் பதிவிட்டிருந்தார்.
அண்மையில், இந்து மத சாமியார் அனிருதாச்சார்யா மகாராஜ், 25 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் திருமணமாகாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழும் பெண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் என்று விமர்சித்திருந்தார். இது பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குக் கண்டனம் தெரிவித்த இந்திய இராணுவத்தின் முன்னாள் மேஜரும், திஷா பதானியின் சகோதரியுமான குஷ்பு, “அவர் என் அருகில் இருந்திருந்தால், பெண்களுக்கு எதிராக அவர் பயன்படுத்திய வார்த்தைகளின் அர்த்தத்தை நான் அவருக்குப் புரியவைத்திருப்பேன்” என்று கூறினார். மேலும், “அவர்கள் தேச விரோதிகள். நீங்கள் ஒருபோதும் அதனை ஆதரிக்கக் கூடாது. இருவரது ஒப்புதலோடு நிகழும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் பெண்களை மட்டும் குற்றம் சாட்டுவது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” என்று சாடியிருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக மாறியதையடுத்து, இந்து மத சாமியார் அனிருதாச்சார்யா மகாராஜ், “அனைத்துப் பெண்களையும் நான் கூறவில்லை, சில பெண்களை மட்டுமே குறிப்பிட்டேன். அதுமட்டுமல்லாமல், எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன” என்று விளக்கமளித்தார். ஆனால், இதனிடையே, அனிருதாச்சார்யா மகாராஜுடன் சேர்ந்து மற்றொரு இந்து மத சாமியாரான பிரேமானந்த்ஜி குறித்தும் குஷ்பு அவதூறு கருத்து தெரிவித்ததாகச் செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து, தான் அனிருதாச்சார்யா குறித்து மட்டுமே பேசியதாகவும், பிரேமானந்த்ஜி குறித்து எதுவும் பேசவில்லை என்றும் குஷ்பு விளக்கமளித்திருந்தார். அதன்பிறகு, இந்தச் சம்பவம் சற்று அமைதியானது.
இந்நிலையில், கோல்டி பிரார் கேங்கைச் சேர்ந்த இருவர் திஷா பதானியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தாக்குதல் நடத்திய இருவரையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதே சமயம், திஷா பதானியின் வீட்டிற்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.