Discovery of Murugan temple mentioned in 10th and 11th century inscription Photograph: (TEMPLE)
'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்பார்கள். குன்று இல்லாத இடத்திலும் குமரனுக்குக் கோவில் உண்டு, மாறாத வழிபாடு உண்டு, சிவகங்கை மாவட்டத்தில் பழமையான முருகன் கோவில்கள் சில இருந்தாலும் மானாமதுரையில் ஆயிரம் ஆண்டிற்கும் பழமையான முருகன் கோவில் இருந்ததை கல்வெட்டால் அறிய முடிகிறது.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர், புலவர் கா.காளிராசா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
வைகை ஆற்றில் கல் தூண்
வைகை ஆற்றில் 1980 காலகட்டத்தில் ஆற்று மணலில் கல்தூண் ஒன்று கிடந்ததை அப்பகுதி மக்கள் அறிந்து கல் தூணை கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். கல் தூணில் கல்வெட்டு இருந்ததைக் கண்டு தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் அவர்கள் கல்வெட்டைப் படித்து ஆவணப்படுத்தி உள்ளார்கள். இந்நிலையில் அக்கல்வெட்டு பராமரிப்பு இன்றி வைகை ஆற்றங்கரையில் பல ஆண்டுகளாக கிடந்தது சிவகங்கை தொல்நடைக் குழுவின் முன்னெடுப்பில் 2025ல் சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒப்படைக்கப்பட்டு தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.
கல்வெட்டுச் செய்தி
ராஜ ராஜ சோழனின் 14 ஆம் ஆட்சி ஆண்டில் 999 ஆம் ஆண்டில் சேந்தன் செங்கோடன் மனைவி பூதனம்பியம்மை சாவா மூவாப் பேராடு 25ல் தினமும் ஒரு ஆழாக்கு நெய் வழங்கியமையை குறிக்கிறது. மற்றொரு பக்கத்தில் ஸ்ரீ வல்லப பாண்டியனின் ஐந்தாவது ஆட்சி ஆண்டில் 1019 ஆம் ஆண்டு பாண்டிய மண்டலத்து கருங்குடி நாட்டு சுந்தரபாண்டியன் கோன் மேநட்டூர் பூவன் நெய் விளக்கு வழங்கிய செய்தியை குறிக்கிறது. இது இரண்டு கல்வெட்டிலும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு விளக்கு எரித்தமையை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தற்பொழுது இன்று குலாலர் தெருவாக அழைக்கப்படும் இப்பகுதி முன்னாளில் கல்வெட்டின் படி திரு குமரமங்கலம் என அழைக்கப்பட்டு இருக்கிறது. ஒரே கல்வெட்டில் ஒரு பக்கத்தில் சோழர் கால 10 நூற்றாண்டு கல்வெட்டும் மற்றொரு பக்கத்தில் 11 ஆம் நூற்றாண்டு பாண்டியர் கல்வெட்டும் இக்கற்தூணில் இருப்பது சிறப்பு.
சுப்பிரமணியர் கோவில்
மானாமதுரை குலாலர் தெருவில் ஐந்து கரைக்குப் பாத்தியமான நூற்றாண்டுகள் பழமையான கட்டுமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயில் உள்ளது. இக்கோவில் பழமையானதாக இல்லாததால் கல்வெட்டில் குறிப்பிடப்படும் முருகன் கோவில் எது என்ற ஐயம் எழுந்த நிலையில் பழமையான முருகன் சிலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
தேடலில் கிடைத்த பழமையான முருகன் சிலை
அப்பகுதியில் சிவகங்கை தொல்டைக் குழுவினர் செய்த தொடர் ஆய்வில் சுப்பிரமணியர் கோவிலுக்கு அருகில் மாயாண்டி சுவாமிகள் மடத்தில் பழமையான முருகன் சிலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
முருகன் போர் கடவுளாக இரண்டு கரங்களில் வஜ்ராயுதம் ஏந்தி 4 கரங்களுடன் தலையில் கிரீடம் மகுடம் சூடி, தோல்வளை,கடகம், இடையில் ஆடை அணிந்து, உடல் முழுதும் பல அணிகலன்கள் பூண்டு அழகுற காட்சி தருகிறார். இது 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டு சிலை, இதைக் கொண்டு இவ்விடத்தில் நீண்ட நாளாக முருகன் கோவில் அமைந்துள்ளது. எனக் கருதமுடிகிறது இவ்வாறாக கல்வெட்டில் குறிப்பிடப்படும் குமரமங்கலமே இன்றைய நாளில் குலாலர் தெருவாக வழங்கப்படுகிறது மேலும் அங்கு உள்ள முருகன் கோவிலே பழமையான பத்து மற்றும் பதினோராம் நூற்றாண்டு கல்வெட்டில் குறிப்பிடப்படும் முருகன் கோவில் அமைந்த இடமாக இருக்கலாம் என கருத முடிகிறது. இவ்வாய்வில் சிவகங்கை தொல்நடைக்குழு இணைச் செயலர் முத்துக்குமரன் உடன் இருந்தார்' இவ்வாறாக அவர் தெரிவித்தார்.
Follow Us