Advertisment

சமண கழுவேற்ற ஓவியங்களுக்கு வலுசேர்க்கும் ஆயிரமாண்டு பழைமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

a4902

Discovery of a thousand-year-old sculpture of Mahavira with a serene face that lends strength to the Samana wash paintings Photograph: (pudukottai)

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளாளவயல் சுப்பிரமணியர் கோவில் வடபுறம் யாரும் உள்ளே நுழைய முடியாத கருவேலமுட்புதரில்  பெரிய கருங்கல் சிற்பம் ஒன்று கிடக்கிறது. சாய்ந்து கிடக்கும் சிற்பத்தின் மேல் இலைகள் கொட்டி தூர்ந்து என்ன உருவம் என்றே தெரியாத அளவில் உள்ளது என்ற தகவல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ.மணிகண்டன் குழுவினருக்கு தெரியவந்ததையடுத்து மணிகண்டன் முட்புதர்கள் அடர்ந்த பகுதிக்குச் சென்று கருங்கல் சிற்பத்தைப் பார்த்து இது தமிழ்நாட்டில்  மகாவீரர் சிற்பங்களில் அபூர்வமான சிற்பம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
  

Advertisment

இது குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல் அறிவியல் துறை ஆய்வாளர் மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

'புதுக்கோட்டை மாவட்டம் , ஆவுடையார்கோவிலுக்கு வடபுறமாக ஏழு கிலோமீட்டர் தொலைவில்  இந்த சிற்பம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த தொடராய்வில்  கருவேல முட்புதர்கள் மண்டி, செடிகள் முளைத்திருந்தது. கீழே சாய்ந்து கிடந்த சிற்பத்தை மீட்பதற்கு புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் இணைச்செயலாளர் பீர் முகமது, ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார், உறுப்பினர்கள் மா.இளங்கோவன், பொதுக் காப்பீட்டு நிறுவன மேலாளர் நலங்கிள்ளி,  எழுத்தாளர் தெம்மாவூர் நந்தன் ஆகியோர் உதவி புரிந்தனர் அதனைத் தொடர்ந்து சிற்பம் நிலை நிறுத்தப்பட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சமண சிற்பங்கள், சமணச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன , அவற்றில் 10 க்கும் மேற்பட்ட  சமண சின்னங்களை எமது புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் கள ஆய்வில் அடையாளப்படுத்தி வருகிறோம்.

Advertisment

 ஆவுடையார் கோவில் பகுதியை பொறுத்தவரையில் அருகிலிருக்கும் சிறுகானூர் எனும் இடத்தில் கடந்த ஆண்டு ஒரு மகாவீரர் சிற்பம் சம்மடக்காளி என்ற பெயரில் பொதுமக்கள் வழிபாட்டிலிருப்பதை அடையாளப்படுத்தி இது மகாவீரர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.

மகாவீரர் சிற்பம் :

வெள்ளாளவயலில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் 124 செ. மீ.உயரமும்,  72 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. சிற்ப அமைதியின் அடிப்படையில் ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வழிபாட்டிற்கு வந்ததாக இருக்கலாம்.

மூன்று சிம்மங்கள் சுமந்த இணையரி ஆசனத்தில்  அமர்ந்த நிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார். அவரது பின்புறம் பக்கத்திற்கு ஒன்றாக சிம்ம யாளித்தாங்கிய திண்டும் அதன் மேல் மகரவாய்களும் காணப்படுகின்றன,  இயக்கன் மாதங்கனும், இயக்கி சித்தாயிகாவும் சன்ன வீரம் பூண்டு இரு புறங்களிலும் கவரி வீசுகின்றனர்.

மகாவீரர் சாந்தமான முகத்துடன் , ஞானமே  வடிவாய் பிரபாவளையம் எனும் ஒளிவட்டத்துடனும், தலைக்கு சற்று மேலாக முக்காலத்தையும் உணர்த்தும் முக்குடை வேலைப்பாட்டுடனும், மலர்களுடைய அசோகமரத்தின் சுருள்சுருளான கிளைகளுடனும் தியான நிலையில் சாந்தமான முகத்தோற்றத்துடன், கருங்கல்லில் மகாவீரர் முற்கால சோழர் கலைப்பாணியில்  செதுக்கப்பட்டுள்ளார்.

வலுசேர்க்கும் வரலாற்று தொடர்ச்சி:

 

a4904
Discovery of a thousand-year-old sculpture of Mahavira with a serene face that lends strength to the Samana wash paintings Photograph: (pudukottai)

 


               
ஆவுடையார் கோயிலுக்கு மேற்கு புறமாக சமணத் தடயங்கள் இருந்ததாக நம்பப்பட்டு வந்தது, ஆனால் அதற்குரிய ஆதாரங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ஆவுடையார்கோயிலுக்கு மிக அருகிலேயே மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதன் மூலமாக ஆவுடையார் கோவிலில் வரையப்பட்டுள்ள சமண கழுவேற்ற ஓவியங்கள் மற்றும் வாய்மொழி தகவல்கள் , மாணிக்கவாசகர் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு இந்த கண்டுபிடிப்பு  முக்கிய சான்றாக அமையும்.
              
2016 ஆம் ஆண்டு முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இப்பகுதியில் தொடராய்வு மேற்கொண்டதன் மூலமாக சிறுகானூர், வெள்ளாளக்கோட்டையூர், தற்போது வெள்ளாளவயல்  ஆகிய இடங்களில் சமணச்சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  என்றார்.

இந்த ஆய்வின் போது சிற்பம் இருக்கும் இடத்திற்கு நேரில் வந்து ஆய்விற்கான ஆலோசனைகளை சமண பௌத்த ஆய்வாளர் முனைவர் ஜம்புலிங்கம் வழங்கியதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். 

ஆய்வின் தொடர்ச்சியாக உள்ளுரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியர் கோவிலை ஒருங்கிணைப்பு செய்து கட்டி எழுப்பியருமான  குருசாமி எனும் சுப்பிரமணியம், சுப்பிரமணியர் கோவில் பூசாரி ரெத்தினம், தாரணி கிராம இளைஞர் ஹரிகரசுதன் உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்களிடம் இந்த சிலையை பாதுகாப்பது குறித்தும் , வருபவர்களுக்கு பாதையை ஏற்படுத்தி தருமாறும் கேட்டுக் கொண்டோம்' என்றார்.

மேலும் கிராமத்தினர், பொக்கிஷமாக கிடைத்திருக்கு இந்த சிலையை காணவும், வழிபடவும் வரும் பொதுமக்களுக்கு சிரமத்தை குறைக்க முதலில் கருவேல முட்செடிகளை அகற்றி பாதை அமைத்துக் கொடுப்போம் என்றனர்

excavation history Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe