Discovery of 9th century AD inscription of Kochadayimaaran
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் வட்டம், கீரணிப்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக அக்கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், பெரிய கருப்பன், பழனியாண்டி, புகழேந்தி, மெய்யர், அடைக்கப்பன், பெருமாள் ஆகியோர் தந்த தகவலையடுத்து, காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் கரு.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு கல்வெட்டைப் படியெடுத்தனர்.
அக்கல்வெட்டில் உள்ள செய்தி குறித்து அவர்கள் தெரிவித்ததாவது, கீரணிப்பட்டியில் உள்ள கண்மாய் பகுதியில் உள்ள ஒரு பலகைக்கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் பின் பகுதியில் நின்ற நிலையில் ஒரு குதிரையின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது. கோச்சடையமாறனின் 10ஆவது ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. சூரலூர் கூற்றத்து சூலூர்பேட்டையில் இருந்து வாழும் ஆருவாரிக்கு ஸ்ரீ கோச்சடையமாறரின் ஆட்சிக்காலத்தில் கீரனூரில் பாவண்ஏரி பகுதியில் அரை மாச்செய் நிலம் ஊரார் தானம் கொடுத்த செய்தியைத் தெரிவிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/21/kal-2025-11-21-23-11-16.jpg)
மேலும் இதை மாற்றுபவர் இவ்வூரை அழித்த பாவம் கொள்வான் என்ற செய்தியைக் கூறுகிறது. பண்டைய கீரனூரே தற்போதைய கீரணிப்பட்டியாக மருவியுள்ளதாகக் கருதலாம். முதலாம் வரகுண பாண்டியனுக்குப் பின்னர் அவனது புதல்வனாகிய சீமாறன் சீவல்லபன் (கி.பி. 835-862) ஆட்சிக்கு வந்தான். சீமாறன் சீவல்லபனுக்குச் சடையன் மாறன் என்ற பெயரும் உண்டு. இவரது வரலாற்றைச் சின்னமனூர்ச் செப்பேடுகளும், தளவாய்புரச் செப்பேடுகளும், சித்தன்னவாசல் கல்வெட்டு மற்றும் சில கல்வெட்டுகளும் கூறுகின்றன. இவருக்கு முந்தைய ஆட்சியாளராகிய மாறன் சடையனின் வட்டெழுத்துக் கல்வெட்டு கீரணிப்பட்டிக்கு அருகில் உள்ள திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Follow Us