புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குன்றாண்டார்கோவில் அருகேயுள்ள கூகூர் கிராமத்தில் கட்டுமான சிதிலங்களுடன் இருந்த மேட்டுப் பகுதியை ஓராண்டுக்கு முன்பாக உள்ளூர் மக்கள் சுத்தம் செய்த போது, ஒரு முழுமையான லிங்க சிற்பமும், நந்தியும் கிடைத்துள்ளது இதனைத் தொடர்ந்து   குன்றாண்டார் கோவிலைச்சேர்ந்த சிவாச்சாரியார் குமாரசாமி,முத்துசுப்பிரமணியன் குருக்கள் ஆகியோர் அளித்த தகவலைத் தொடர்ந்து அவ்விடத்தில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர், மங்கனூர் ஆ.மணிகண்டன் ஆய்வு செய்த போது பண்டைய நிர்வாக உரிமையை வெளிப்படுத்தும்  இரண்டு ஆசிரியம் கல்வெட்டுகள் மற்றும் ஒரு துண்டு கல்வெட்டும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர், மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது,

ஆசிரியம் கல்வெட்டுகளின் பரவல் :

Advertisment

தமிழக அளவில்  நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே  ஆசிரியம் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன இதில் அதிகமான கல்வெட்டுகள் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது,   புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் கள ஆய்வில், திருமயம் வட்டாரத்திலுள்ள மலையடிப்பட்டி, மேலப்பனையூர், தேவர்மலை . அன்னவாசல் வட்டத்தில் சிறுசுனையூர் ,  குளத்தூர் வட்டாரத்தில் வாழமங்கலம் மற்றும்   அன்னவாசல் வட்டத்தில், பெருங்குடிப்பட்டி, வயலோகம் ஆகிய ஊர்களில் அடையாளப்படுத்தியுள்ளோம்.

இடைக்காலத்தின் இறுதி காலகட்டத்தில் பெரிய அரசுகளின் ஆட்சி நிர்வாகம் வலுவிழுந்து, உள்ளூர் அளவிலான நிர்வாகங்களாக பாதுகாப்பு,  பாசன நிர்வாகம், வரி வருவாய், ஆகியவற்றை மக்களே தீர்மானித்துக் கொள்ளும் சூழல் இருந்தது. இத்தகைய நிர்வாக அறிவிப்புகளை, பொது மக்களுக்கு அறிவிக்கும் நோக்கத்தோடு, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ஆசிரியம் கல்வெட்டுகள்  அமைக்கப்பட்டுள்ளதாக  புரிந்து கொள்ள முடிகிறது.

Advertisment

புதிய  கல்வெட்டுகள்  சொல்லும் செய்தி:

13 ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் ஒன்றரை அடி அகலம், இரண்டேகால் அடி நீளம் கொண்ட சமமற்ற பலகைக்கல்லில் 11 வரிகளுடன் கூடிய முதல் கல்வெட்டில் வடபனங்காட்டு நாட்டைச்சேர்ந்த கிளிஞலூர் (கிள்ளனூர்) வாரங்காதிகர்   என்பாருக்கு ஆசிரியம் ஆகியிருந்த கூகூர் பகுதியை,   குமாரமங்கலத்தை பூர்வீகமாகக்கொண்ட தென் உடையான் எனும் பெயருடைய தென்கரை நாட்டு (தென் மலை நாடு) வேளான் என்பார் மீளுரிமை பெற்ற செய்தியை பகிர்கிறது.

இரண்டாவது கல்வெட்டு, 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியுடன், தோரண வாயில் புடைப்புடன், மங்கள வரியில் தொடங்கி, சிவ வீரை அரையகளில்  சேர்ந்த மனுக்கு திருநானசம்பந்த பிள்ளை  அடி ஆசிரியம் என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது,  அதாவது அருகிலுள்ள வீரக்குடி கிராம அரையர்களடங்கிய மக்களை,  திருநானசம்பந்தபிள்ளை என்பார் ஆதரித்த அறிவிப்பினை பகிர்கிறது. மூன்றாவது துண்டு கல்வெட்டில் விரிவான விவரங்கள் ஏதுமில்லை என்றாலும் முல்லை என்ற வார்த்தை முழுமையாக காணப்படுகிறது. இதில் காணப்படும் எழுத்தமைதியின் அடிப்படையில் 15 ஆம் நூற்றாண்டுக்கு பிந்தய கல்வெட்டாக கருதலாம்.

தென்மலை நாடு கிளிஞலூர்:

குன்றாண்டார் கோவில்  குன்றினை அடிப்படையாக வைத்து நாடுகள் பிரிக்கப்பட்டுள்ளது அந்த விதத்தில் குன்றுக்கு தென்புறமாக உள்ள நாடு தென்மலை நாடு என்று அழைக்கப்பட்டு வருகிறது , இது தென்கரை நாடு என்றும் அழைக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

கிள்ளனூர் பகுதியில் இன்றும் காணப்படும் கிளிஞ்சல் வகை மெல்லுடலி விலங்குகளின் ஓடுகளை அதிகமாக காண முடிகிறது அந்த விதத்தில் இவ்வூர் 13 ம் நூற்றாண்டு காலத்தில் இங்கு கிடைத்த ஒரு தொன்மப் படிமங்களின் அடிப்படையில் கிளிஞலூர் என்றும் அழைக்கப்பட்டிருப்பதை இக்கல்வெட்டுச் சான்று வெளிப்படுத்துகிறது என்றார்.

கல்வெட்டு ஆய்வுப் பணியின்போது உள்ளூரைச்சேர்ந்த பாண்டியன், தங்கம், பாலு, அருள்பாண்டி, ராமு, விஜயகுமார், பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.