சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற தலைவராக தலைமை ஆசிரியர் குமார் உள்ளார். மன்ற பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில் களப்பயணத்தின் போது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர்வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, மாதநாயக்கன்பட்டி பள்ளியில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள விவசாய விளை நிலத்தில் நடுகல் இருப்பதை மாணவர்கள் கூறியதையடுத்து அங்கு ஆய்வு செய்யப்பட்டது. இந்த நடுகல் பற்றி ஆசிரியர் விஜயகுமார் கூறுகையில், ''ஒரு போர் வீரனின் நடுகல் புடைப்புச் சிற்பமாக உள்ளது . காலம் 13 ஆம் பொது நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக உள்ளது. நடுகல் தரையின் மீது 3.20 அடி உயரமும், அகலம் 2.70 அடி ஆகும், கருங்கல் பலகை கல்லில் மேல் தமிழ் எழுத்துக்களில் 4 வரிகளும், வலப்புறம் 13 வரிகளும் உள்ளன. இந்த வரிகள் சிதிலமடைந்து உள்ளது.
கல்லின் பின்புறம் எழுத்துகள் எதுவும் இல்லை. இப்போர் வீரர்களின் வலது கையில் குத்து வாளும், இடக்கையில் வில் அம்பும், காதில் பத்திர குண்டலமும், ஜடாமுடியும், இடுப்பில் அரை ஆடையும், கையில் காப்பும், கழுத்தில் பெரிய அளவில் அணிகலனும் அணிந்துள்ளார். அது தெளிவாகத் தெரியவில்லை. அவரின் காலில் இரண்டு அம்புகள் துளைத்துள்ளது. இடக்கைக்கு கீழே ஒரு மனித தலையும் அதில் அம்பு ஒன்றும் பாய்ந்து வெளிவருவது போன்று உருவம் உள்ளது.
கால்கள் ஆளிடாசன நிலையிலும் உள்ளது . எழுத்து அமைதியை வைத்துப் பார்க்கும் பொழுது 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இதனைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. இராசகோபால் உறுதி செய்துள்ளார். மேலும் கோவை யாக்கை மரபு குழுவினர் வந்து பார்த்து உறுதி செய்தனர்' என்றார்.