சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம், கோட்டூர் நயினார்வயல் அகத்தீஸ்வரர் கோவில் செளந்தரநாயகி அம்மன் சந்நிதி அர்த்தமண்டபம் உள்பகுதி இடது மற்றும் வலதுபுற சுவரில் இரு கல்வெட்டுக்கள் இருப்பதாக எழுத்தாளர் ஆறாவயல் பெரியய்யா தெரிவித்த தகவலின் பேரில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா மற்றும் புதுக்கோட்டை தொல்லியல் கழகத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டு அவ்விரு கல்வெட்டுக்களை படியெடுத்தனர்.

Advertisment

kal1

கல்வெட்டுக்களில் உள்ள செய்தி குறித்து அவர்கள் தெரிவித்ததாவது, “ஒரு கல்வெட்டு 36  வரிகளையும் மற்றொரு கல்வெட்டு 39 வரிகளையும் கொண்டுள்ளன.  இவை பாண்டிய நாட்டை ஆண்ட முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் 14 வது ஆட்சியாண்டை (கி.பி.1229) சேர்ந்தவையாகும். முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியநாட்டை கி.பி.1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த திறமையான அரசன் ஆவார். இவர் சோழர்களைப் போரில் தோற்கடித்ததால் சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவர் என இவரது கல்வெட்டுக்களின் மூலம் அறியப்படுகிறார். இப்பாண்டிய மன்னரது அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாக இருந்த அதாவது மாளவச் சக்கரவர்த்தி என்றும் மக்களால் மழவர் மாணிக்கம் என்றும் அழைக்கப்பட்ட அவ்வதிகாரி  காளையார்கோயில் என்று வழங்கும் திருக்கானப்பேர் நகரில் வாழ்ந்தவன் ஆவான்.

Advertisment

இக்கல்வெட்டு காணப்படும் இவ்வூருக்கு வந்த மாளவச்சக்கரவர்த்தி திருவகத்திசுவரமுடைய நாயனார் கோயில் பூசையின்றி கிடக்குதென்று மன்னனிடம் சொல்லவே, மன்னர் கோயிலைச் சுற்றி இருந்த காட்டை வெட்டி அழித்து திரு அகத்தீஸ்வரமுடையநாயனார்க்கு வேண்டிய பூசைகள் செய்ய ஓடைபுறத்தில் இரண்டு மாச்செய் நிலம் காணியாக அந்தராயம், விநியோகம் உட்பட அனைத்து வரிகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட செய்தியைக் குறிக்கிறது.  மேலும் ஒரு கல்வெட்டில் இவ்வூர் பாலூர் என குறிப்பிடப்பட்டுள்ளதோடு திருவனந்திசுவரமுடையாருக்கும், அஞ்சாத பெருமாள் சந்திக்கும் அதாவது பூசைக்கும், திருப்படி மாற்றும் செலவினத்துக்கும் வரி நீக்கி இரண்டு மா நிலம் வழங்கப்பட்டு அதன் நான்கெல்லைகளிலும் திரிசூலக்கல் நட்டு வைத்து இவ்வாண்டு முதல் சந்திர சூரியன் உள்ளவரை இத் தர்மம் நிலைத்திருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

kal2

இக்கல்வெட்டு மாளவச் சக்கரவர்த்தி ஓலை என்று துவங்குவது குறிப்பிடத்தக்கது. இதுபோல அரண்மனைச் சிறுவயல் கோயிலில் காணப்படும் கல்வெட்டிலும் மாளவச்சக்கரவர்த்தி ஓலை என்ற வரி காணப்படுகிறது. மேலும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் திருப்புத்தூர், சதுர்வேதிமங்கலம், பெரிச்சி கோயில், அரண்மனை சிறுவயல், திருமலை, கம்பனூர், வெளியாத்தூர் போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் செய்தி போலவே வெளியாத்தூர் கோயிலில் காணப்படும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டிலும், மழவராயர் நமக்குச் சொன்னைமையினால் என்று வரிகள் வருவது குறிப்பிடத்தக்கது” எனத் தெரிவித்தனர். 

Advertisment