Disaster Relief Competition - Tamil Nadu Team Achieves Photograph: (TAMILNADU)
தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-ம் அணியானது தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்பு குழுவாகும் (TNDRF). இந்த அணியானது 10.11.2025 முதல் 12.11.2025 வரை காசியாபாத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான CBRN (வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) பேரிடர் மீட்புப் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த இறுதி போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக தென்னிந்திய மண்டல அளவில் கடந்த மாதம் ஒரிசாவில் நடைபெற்ற CBRN போட்டியில் ஆந்திரபிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய 04 மாநில அணிகள் கலந்து கொண்டன. இதில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை முதல் இடத்தை பிடித்தது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள நான்கு மண்டலங்களிலும் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் இரண்டு இடங்கள் பிடித்த 08 அணிகளுக்கு தேசிய அளவில் நவம்பர் 10 முதல் 12 வரை மூன்று நாட்கள் CBRN போட்டியானது.
காஜியாபாத்தில் (உத்தரப்பிரதேசம்) உள்ள 8வது NDRF பட்டாலியனில் நடைபெற்றது. இதில் நம் நாட்டில் உள்ள 18 மாநில பேரிடர் மீட்புப் படைகள் மண்டல அளவிலான போட்டியில் கலந்துகொண்டன. அதில், முதல் இடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற 08 மாநில அணிகள் (தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிர, ராஜஸ்தான், அசாம். மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திரப்பிரதேசம்) தேசிய அளவிலான இறுதி போட்டிக்கு தகுதிபெற்றன. கடுமையான இறுதிப் போட்டியின் முடிவில், தமிழ்நாடு காவல்துறை (TNDRF) முதலிடத்தையும், உத்தராகண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசம் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தன.
தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரின் 24 பேர் கொண்ட இந்த அணியானது காவல்துறை கூடுதல் இயக்குநர் முனைவர் இரா. தினகரன். இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் தளவாய் சு.அய்யாச்சாமி அவர்களின் நேரடி மேற்பார்வையில் இப்போட்டிக்கான பயிற்சிகளை திறம்பட மேற்கொண்டு உதவி தளவாய் செ.மணிமாறன் அவர்களின் தலைமையில், 02 சார்பு ஆய்வாளர்கள் மற்றும் 18 காவலர்கள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) ஆபத்துகளின் போது எவ்வாறு செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாப்பது, மீட்பது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பது குறித்தும் அவசர நிலைகளைச் சமாளிப்பதற்கும் அவற்றை வலுப்படுத்துவதற்கும் பல்வேறு மாநிலங்களின் பேரிடர் மீட்புப் படைகளின் தயார் நிலையில் வைப்பது, பரஸ்பர ஒருங்கிணைப்பு மற்றும் செயல் திறன்களை மதிப்பிடுவது ஆகும்.
பின்னர் நவம்பர் 13 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற பிரமாண்டமான பரிசு வழங்கும் விழாவில் வெற்றி பெற்ற தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு தேசிய பேரிடர் மீட்பு படை தலைமை இயக்குனர் பியூஸ் ஆனந்த் அவர்கள் முன்னிலையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் R.நித்தியானந் ராய் அவர்களால் வழங்கப்பட்ட கோப்பையை தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை சார்பாக காவல்துறை கூடுதல் இயக்குனர் முனைவர் இரா.தினகரன், இ.கா. (செயலாக்கம்) அவர்கள் பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இச்சாதனையை தமிழக காவல்துறையின் இயக்குநர்/படைத்தலைவர் G.வெங்கட்ராமன், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
Follow Us