தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மக்கள் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த பரிசுத் தொகுப்பில் பொங்கல் பொருட்களான அரிசி, வெல்லம், கரும்பு, புத்தாடை போன்ற பொருட்கள் இடம்பெற்றிருக்கும்.

Advertisment

இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகுப்பினை இன்று (03.01.2026) மாலை 4.30 மணிக்கு அளிப்பதாகப் பாண்டிச்சேரி அரசு அறிவித்திருந்தது. இந்த விழாவினை முதலமைச்சர் ரங்கசாமி தொடக்கி வைப்பார் என்றும் கூறப்பட்டது. எனவே திலாசுப்பேட்டை நியாயவிலைக்கடையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் விழாவானது திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் சென்றுவிட்டனர். இந்த தேதி மாற்றத்திற்கான காரணத்தைக் கேட்ட போது, நெய் உள்ளிட்ட சில பொருட்கள் இன்னும் வரவில்லை என்றும், அந்த பொருட்கள் வந்ததற்குப் பிறகு மொத்தப் பொருட்களும் ஒருங்கே வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின்றன. 

Advertisment

இருப்பினும் இது குறித்து அரசு தரப்பில் எந்த ஒரு உறுதியான தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், பரிசுப்பொருட்களைப் பெறுவதற்காக நீண்ட நேரம் மக்கள் காத்திருந்தனர், தற்போது அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ 800 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த பரிசுத்தொகுப்பில் 4 கிலோ அரிசி, 1 கிலோ நாட்டுச் சர்க்கரை, 1 கிலோ பாசிப்பருப்பு, 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 300 கிராம் நெய் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதாகவும் கூறப்பட்டது. சுமார்3 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இப்பொங்கல் பரிசுப்பொருள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.