'Disappointment, disappointment, disappointment...' - Chief Minister M.K. Stalin condemns the central government Photograph: (dmk)
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு 2026-27ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய பட்ஜெட்டை காலை 11 மணியளவில் நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை பொறுத்த வரையில், “பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
ஐதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு இடையே அதிவிரைவு ரயில் தடம் உருவாக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் அரிய வகை கனிமங்களுக்கான வழித்தடத் திட்டம் உருவாக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 'இந்த ஆண்டாவது வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் இடம்பெறுமா?' என முன்னதாகவே எக்ஸ் வலைத்தள பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தை தருவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெரிதும் எதிர்பார்த்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கத்தை விட பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தாண்டாவது பாஜக அரசின் கண்களுக்கு தமிழ்நாடு தெரியும் என எதிர்பார்த்து இருந்தோம். அந்த எதிர்பார்ப்பை பொய்க்க செய்து ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏழைகள், பெண்கள், விவசாயிகள், விளிம்புநிலை மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் இடம் பெறவில்லை. மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் பங்கை 50 சதவீதமாக உயர்த்தும் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரிப்பயிர்வு தொடர்ந்து 41 சதவீதம் என்ற அளவில் தொடரும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கான ஒன்றிய வரிகளின் பங்கு ரூபாய் 1200 கோடி அளவில் குறைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
ஜல்ஜீவன் திட்டத்தின் திருத்திய மதிப்பீட்டில் 17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது முடக்குவதற்கான முயற்சி. கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய், வீடு கட்டும் திட்டத்திற்கு 32 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பிஎம் இன்டர்ன்சிப் திட்டத்திற்கு வெறும் 526 கோடி என்ற சொற்ப அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நிதிநிலை அறிக்கைகளிடம் பெரும் திருக்குறளும் இம்முறை இடம் பெறவில்லை. பெரிதும் எதிர்பார்த்த ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை வழக்கத்தை விட பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.இந்த நிதிநிலை அறிக்கை மொத்தத்தில் ஏமாற்றும் ஏமாற்றம் ஏமாற்றத்தையே தருகிறது.
Follow Us