“வலி தாங்க முடியாம கத்துனாங்க... ஆனாலும் நான் விடல..” -  இளைஞரின் பகீர் வாக்குமூலம்

103

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏகனிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜலாலுதீன். இவரது மனைவி பர்வீன்பீவி (வயது 45). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் இறந்துவிட்டதால், பர்வீன்பீவி தனது குழந்தைகளுடன் காரணியானேந்தல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.  மேலும், வாழ்வாதாரத்திற்காக பால் மாடுகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை, இருட்டத் தொடங்கிய நேரத்தில், மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பாததால், பர்வீன்பீவி அவற்றைத் தேடி வயல் பகுதிக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மாடுகள் வேறு வழியாக வீடு திரும்பியிருக்கிறது. ஆனால், மாடுகளைத் தேடிச் சென்ற பர்வீன்பீவி வீடு திரும்பவில்லை. தாயை ரொம்ப நேரமாக காணவில்லை என அச்சப்பட்ட மகள்கள் அக்கம் பக்கத்தில் உள்ள உறவினர்ககளிடம் கூறியுள்ளனர். அதன்பின்னர், உறவினர்களும் அந்த பகுதியில் தேடிபார்த்துள்ளனர். ஆனால், இருட்டாக இருந்ததால், அவரை கண்டுபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து அவரை எங்கும் காணாததால், ஆவுடையார்கோயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் காலை வரை பர்வீன்பீவி வீடு திரும்பாததால், உறவினர்கள் மீண்டும் வயல் பகுதிக்கு சென்று தேடி பார்த்தனர். அப்போது, ஒரு வயலில் இழுத்துச் செல்லப்பட்ட தடயங்களைப் பார்த்து, சுமார் 200 மீட்டர் தொலைவு சென்றபோது, கருங்குழிக்காடு கண்மாயில் முழங்கால் அளவு தண்ணீரில் பர்வீன் பீவியின் உடல் மிதப்பதை கண்டுள்ளனர். மேலும், உடல் மிதக்காமல் மறைத்து வைக்க அதன் மீது துணி துவைக்கும் கல் வைக்கப்பட்டிருந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நாகுடி காவல்துறையினர் உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தடயங்களை சேகரித்தனர்.

அதன்பிறகு திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணையை துரிதப்படுத்தினர். இதற்கிடையில், கொலையாளிகளை விரைவாக கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  15 ஆம் தேதி இரவு, பர்வீன்பீவியைக் கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்வதாக உறவினர்களுக்கு உறுதியளிக்கப்பட்டு, உடல் ஒப்படைக்கப்பட்டது.

கண்மாய் பகுதியில் சம்பவத்தன்று மாலையில் சென்றவர்கள் குறித்து விசாரித்த காவல்துறையினர், ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய கருங்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் காளிதாஸ் (வயது 26) என்பவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில், காளிதாஸ் கூறியதாவது: “சம்பவத்தன்று எங்க உறவினர் வீட்டு விசேசத்திற்கு சென்று மது குடித்து விருந்து சாப்பிட்டு வீட்டுக்கு வந்தேன். மாலையில் மறுபடி மது பாட்டிலுடன் கண்மாய்க்கரைப் பக்கம் பைக்ல போய் சரக்கடித்துக் கொண்டிருந்த போது தான் அந்தம்மா மாடுகளை தேடி வந்தாங்க. அவங்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். போதை ஓவரானதால அவங்க வயதானவங்க என்பதே தெரியல ஒரு வெறியில அவங்களை கீழே தள்ளிட்டேன். போதை சில இடங்கள்ல கடித்து வைத்துவிட்டேன். வலி தாங்க முடியாம அவங்க கத்தினாங்க, ஆனால் நான் விடல. எல்லாம் முடிஞ்சதும் இவங்க வெளியில போய் சொல்லிடுவாங்களேன்னு பயம் வந்துடுச்சு. அதனால தலைமுடிய பிடிச்சு சுத்தி இழுத்ததுல கீழே கல்லுல தலை அடிபட்டது. அப்பறம் நெஞ்சுல தாக்கினதுல இறந்துட்டாங்க. கொஞ்ச தூரம் இழுத்துட்டு போனேன். கொஞ்ச தூரம் தூக்கிட்டு போய் தான கண்மாய் தண்ணியில போட்டு கல்லு தூக்கி வச்சுட்டு, பைக் எடுத்துட்டு வீட்டுக்கு வநதுட்டேன். ஆனால் நான் நடந்து போன தடம் போலீசாரிடம் காட்டிக் கொடுத்துடுச்சு” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, காளிதாஸை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrested police pudhukottai woman
இதையும் படியுங்கள்
Subscribe