வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பெண் கவிதா. இவர் அதே பகுதியில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் 4 லட்சம் வரை பணம் செலுத்தி வந்துள்ளார். இதனை அப்போது பணியில் இருந்த சுடர்நிதி என்ற அஞ்சல் அலுவலக ஊழியர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த கவிதா , தனது பணத்தை மீட்டுத் தரக்கோரி கடந்த 2 ஆண்டுக்கு மேலாக பலமுறை தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இருப்பினும் இதுவரை உரிய நடவடிக்கை இல்லாததால் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளிக்க கவிதா வந்திருந்தார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அங்கு வரும் போது அவர் முன்னிலையிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய காவலர்கள் தண்ணீர் ஊற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ குளிக்க முயற்சித்த பெண்ணிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் இது குறித்து சத்துவாச்சாரி காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us