தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு படிப்பைத் தாண்டி சுயஒழுக்கம், தொழில்நுட்பம், சுய முன்னேற்றம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மகா விஷ்ணு என்ற நபர், மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசி சர்ச்சையில் சிக்கினார். அதனை தொடர்ந்து, அவருக்கு எதிராக கண்டனக் குரல் எழுந்ததால் அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Advertisment

இந்த நிலையில், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் இன்னொசென்ட் திவ்யாவின் தோழி என்று கூறி ஒரு பெண், கல்லூரி மாணவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மனவெழுச்சி நுண்ணறிவு மூலம் வாழ்க்கை திறன்களில் ஆற்றல் பெறுதல் என்ற தலைப்பில் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் கல்லூரிகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் இன்னொசென்ட் திவ்யாவின் தோழி ஜெயபாபு என்ற பெண் நடத்தி வருகிறார்.

Advertisment

அதன்படி, ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் வகுப்பு நடத்திக் கொண்டிருந்த போது ஜெய பாபு, இன்னொசென்ட் திவ்யாவின் அதிகாரத்தை குறிப்பிட்டு மாணவர்களை சபித்துக் கொண்டும் மிரட்டியும் பாடம் நடத்துகிறார். குறிப்பாக, ‘வாயில் விரல் வைக்கவில்லை என்றால் டிசி கொடுங்க, செக்ரெட்டரி என்னுடைய தோழி தான்...’ என மிரட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய தோழிக்கு, அரசு நடத்தும் நிகழ்ச்சியை இன்னொசென்ட் திவ்யா ஏற்பாடு செய்திருக்கிறார் என்று அவருக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஜெய பாபு இந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது ஆசிரியர் சங்கம் சார்பில் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.