இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி (15.08.2025) அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
வரி விதிப்பு மூலம் ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் நெருக்கடியான சூழலை ஏற்படுத்திவரும் நிலையில் டிரம்ப் - புதின் சந்திப்பு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது கச்சா எண்ணெய் விவகாரம், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் குறித்து இருவரும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் , ரஷ்ய அதிபர் புதினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இருவரும் அலாஸ்காவில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என த் தகவல் வெளியாகியுள்ளது.
எனவே அமெரிக்கா - ரஷ்யா இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த சந்திப்பானது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் என ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றம் நீடித்து வரும் நிலையில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு உலக அரங்கில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உற்று நோக்கிக் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.