தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இன்று (02.02.2026) காலை முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், பா.ஜ.க தலைமையில் மற்றும் பலர் என்றும் ஊழல் கட்சி என்றும் கூறி அதிமுக பெயரை சொல்லாமல் விமர்சித்தார். இது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், விஜய் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, “விஜய் இன்று வழக்கம் போல் அதிமுகவை மட்டம் தட்டி குறை சொல்லி ஊழல் கட்சி என்று சொல்லியதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அப்படி சொல்லிருந்தால் ஏற்கெனவே அவருக்கு கேள்வி கேட்டிருக்கிறோம். விஜய் ஊழல்வாதியா இல்லையா? அவர் உழைக்கிற சம்பளங்கள் நியாயமானதா? கருப்பு பணமா? வெள்ளை பணமா? என்று தெரிவிக்க வேண்டும். அவருடன் இருக்கிற ஆதவ் அர்ஜுனாவும், அவருடைய மாமனார் மார்டின் நேர்மையான வழியில் சம்பாதித்து இருக்கிறார்களா?. செங்கோட்டையன், வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாகக் கூறி வழக்கு போட்டு சிறைக்கு சென்று ஜெயலலிதா காலத்தில் விடுதலை செய்யப்பட்டவர். இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு நேர்மையானவர், ஊழல் அற்றவர் என்று நிரூபித்த பிறகு அதிமுகவை குறை சொல்லுங்கள்.
திமுகவை அவரால் வீழ்த்த முடியாது. அவருடைய படத்தை ஓட்டுரிமை இல்லாதவர்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஓட்டுரிமை இருப்பவர்கள் அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். அமித் ஷா இங்கு வந்த போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் இதனுடைய தலைமை கட்சி அதிமுக தான் என்றும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்றும் தெளிவாக சொல்லிவிட்டார். எனவே நாங்கள் பா.ஜ.கவுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிபிஐ விசாரணை நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, திமுகவும் அதிமுகவும் ஊழல் கட்சி என்று சொல்கிறார். ஆனால் கொள்கை எதிரி என்று கூறிய அவர், பா.ஜ.கவை குறையே சொல்லவில்லை. அதற்கு என்ன காரணம், அவர் தான் விளக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/vijaydind-2026-02-02-18-16-20.jpg)