திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கூட்டத்து அய்யம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 32). இவர் அப்பகுதியில் பால் கரக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் ராமச்சந்திரனும் அதே பகுதியில் வசித்து வரும் சந்திரன் என்பவரின் மகள் ஆர்த்தியும் காதலித்து வந்துள்ளனர். அதே சமயம் இந்தக் காதல் விவகாரம் ஆர்த்தியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. மேலும், ராமச்சந்திரனும் ஆர்த்தியும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் இதனால் இந்த காதலுக்கு ஆர்த்தியின் பெற்றோருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ராமச்சந்திரனும் ஆர்த்தியும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் ஆர்த்தியின் பெற்றோர் இந்த திருமணத்திற்குத் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக ஆர்த்தியின் தந்தை சந்திரனுக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே தகராறும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று (12.10.2025) மாலை கூட்டாத்து ஐயம்பாளையம் பாசன கால்வாய் அருகே ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆர்த்தியின் தந்தை சந்திரன், ராமச்சந்திரனை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ராமச்சந்திரனைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் இரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை காவல் துறையினர் ராமச்சந்திரனின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
அதோடு இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த கொலைக்குக் காரணமான சந்திரனைக் கைது செய்த நிலக்கோட்டை போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மகள் மாற்றுச் சமூக இளைஞரைக் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை மருமகனைச் சரமாரியாக வெட்டி ஆணவப் படுகொலை செய்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.