'Didn't you get it...?' - Shock in Madurai Photograph: (madurai)
மதுரையில் பெற்ற தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதரனால் பெண் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள சித்தம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மகன் பாலமுருகன், மகள்கள் ஐஸ்வர்யா, பிரியங்கா. நர்சிங் படித்திருக்கும் பிரியங்கா (24) நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். ஐஸ்வர்யாவிற்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் பிரியங்காவிற்கு பெற்றோர்கள் திருமண வரன் பார்த்து வந்துள்ளார்.
அதன்படி மதுரையைச் சேர்ந்த ஒருவருடன் அண்மையில் பிரியங்காவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்துள்ளது. நிச்சயதார்த்தத்தின் போது இந்த திருமணத்தில் தனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை எனத் தெரிவித்த பிரியங்கா, தான் ஒரு இளைஞரை காதலிப்பதாக வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
பெற்றோர் அதை ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடந்த வாரம் வீட்டை விட்டு பிரியங்கா வெளியேறினார். தன் மகள் காணாமல் போனதாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில் வீட்டிற்குச் செல்ல விருப்பமில்லை என பிரியங்கா போலீசாரிடம் கூறியதால் விருதுநகரில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
தங்கள் பேச்சை ஏற்றுக்கொள்ள வில்லை என்ற கோபத்தில் அந்த காப்பகத்திற்குச் சென்ற பிரியங்காவின் தந்தை ரமேஷ், அண்ணன் பாலமுருகன் ஆகியோர் சமாதானம் பேசியுள்ளனர். இதனால் குடும்பத்தாருடன் செல்ல பிரியங்கா முடிவு செய்து மூன்று பேரும் காரில் மதுரை நோக்கிச் சென்றுள்ளனர்.
வில்லாபுரம் அடுத்துள்ள ஜவகர்புரத்தில் உள்ள ரமேஷின் மூத்த மகள் ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்றனர். ஐஸ்வர்யா மற்றும் அவருடைய கணவர் இருளாண்டி ஆகியோர் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த ரமேஷ், பாலமுருகன் ஆகிய இருவரும் 'குடும்பத்தை அசிங்கப்படுத்தாத... நாங்க பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யலன்னா நீ உயிரோடவே இருக்கக் கூடாது' எனக் கூறி கத்தியால் குத்தியுள்ளனர்.
வெளியே நின்று கொண்டிருந்த ஐஸ்வர்யா, இருளாண்டி ஆகியோர் சுதாரித்து உள்ளே வருவதற்குள் இருவரும் தப்பிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரியங்கா மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து இருளாண்டி அளித்த புகாரின் பெயரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
திருமணம் செய்ய மறுத்த இளம்பெண் தந்தை மற்றும் அண்ணனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us