கரூரில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று இரவு கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். அதேபோல் பிரச்சாரத்திற்கு கொடி கம்பம், பிளக்ஸ் பேனர்கள் ஏற்பாடு செய்த கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்பொழுது லைட் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி கேட்டும் காவல்துறையினர் மறுத்தனர் என தவெக நிர்வாகிகள் தெரிவித்த நிலையில், அங்கு பெட்ரோல் பங்க், சிலைகள் இருப்பதால் அங்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது என தெரிவித்த காவல்துறையினர், அழைத்துச் சென்று அனைத்து இடங்களையும் காண்பித்தோம், தமிழக வெற்றிக் கழகத்தினர் நேரத்தை கடைப்பிடிக்கவில்லை, விஜய் குறித்த நேரத்தில் பரப்புரைக்கு வராததே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டை காவல்துறையினர் வைத்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/09/30/a5397-2025-09-30-13-03-49.jpg)
மேலும் கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நீதிமன்றத்தில் வைத்த வாதத்தில் 'முனுசாமி கோவில் பகுதியில் ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதம் செய்தார். பரப்புரை வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தவுடன் போதும் என்றேன். அங்கே விஜய் பார்த்திருந்தால் கூட்டம் கலைந்து சென்று இருக்கும். முனுசாமி கோவில் பகுதிக்கு வந்தவுடன் விஜய் உள்ளே சென்றுவிட்டார். விஜய்யின் பரப்புரை வாகனம் தொடர்ந்து முன்னே சென்றதால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது' என்றார்.
தமிழக அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 'குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்பதால் மேலும் சிலரைக் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது' என்ற வாதத்தை வைத்தது.
அசாதாரண சூழல் ஏற்பட்டால் பரபரப்புரையை ரத்து செய்யலாம் என்று உள்ளது. போலீசார் ஏன் ரத்து செய்யவில்லை? ஒரே இடம்தான் நடத்தினால் நடத்துங்கள் என போலீசார் கறார் காட்டினர். கரூர் சம்பவத்தில் அரசியல் சூழ்ச்சி உள்ளது என வாதத்தை தவெக தரப்பு வைத்தது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கரூர் சம்பவத்தில் யார் மீது தவறு உள்ளது கூறுங்கள்? விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரியுமா தெரியாதா? விடுமுறை காலத்தில் விஜய்யை பார்க்க பத்தாயிரம் பேர் மட்டுமே வருவார்கள் என எப்படிக் கணக்கிட்டீர்கள்?' எனக் தவெக தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.