மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று மாலை 03:30 மணி அளவில் தொடங்கியது. இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி உள்ளிட்ட மதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!! அங்கீகாரம் பெறுவோம்!!! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் வெளியே 65 அடி உயர கொடி கம்பத்தில் மதிமுக கொடி ஏற்றப்பட்டது. பிறகு நுழைவு வாயில் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்டது. அத்தோடு மதிமுக கொள்கை வீரர்களின் புகைப்பட கண்காட்சி பார்வையிடப்பட்டது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மாநாட்டின் நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசி வருகிறார்கள்.

மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ எம்.பி பேசியதாவது “மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகம் தொடங்கிய 32 வருடங்களாகவே பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது. இருண்ட தமிழகத்தை ஒளிரச்செய்தவர் பேரறிஞர் அண்ணா. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மட்டும்ம் இல்லையென்றால் இந்த மண்ணில் சமூக நீதி கருத்துக்களுக்கு இடமில்லை. எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றால் அது பேரறிஞர் அண்ணாவின் சித்தாந்த கொள்கையால் தான்.

உலகமெங்கும் தமிழர்கள் ஆங்கில புலமையோடு இருப்பதற்கு காரணம் அண்ணாவின் இருமொழி கொள்கையால் தான். இரு மொழி கொள்கையை விட்டு விட்டு இந்தி மொழியை கையில் எடுத்த வட மாநிலங்களின் நிலையை நாம் அறிவோம். ஒன்றிய பாஜக அரசு மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்கப் பார்க்கிறது. மூன்று மொழியை கற்றால் என்ன தவறு என்று கேட்கிறார்கள். ஆனால், ஒன்றிய அமைச்சர் அமைச்சர் மேடை தோறும் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார். ஆங்கிலம் கூடாது என்கிறார். ஆங்கிலம் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கேட்டு இருக்கிறேன் அதற்கு யாரும் தக்க பதில் இதுவரை அளிக்கவில்லை.

Advertisment

வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் நம் நாடு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த அடிப்படை கோட்பாட்டை சிதைத்து விட்டு ஒரே நாடு ஒரே மொழி அது இந்தி மொழி, ஒரே நாடு மதம் இந்து மதம், ஒரே நாடு ஒரே கலாச்சாரம் அது சங்க்பரிவார் கலாச்சாரம் என்று ஒன்றிய பாஜக அரசு முயற்சிக்கிறது. இருமொழி கொள்கையை கை விட்டு விட்டு மும்மொழி கொள்கையை திணிக்கப்பார்க்கிறார்கள். அதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பதால் தான் நமக்கான கல்வி உதவித் தொகையினை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய வளர்ச்சி நிதி, நிவாரண நிதி போன்ற எந்த நிதியையும் தமிழகத்திற்கு தராமல் வஞ்சிக்கிறது. மேலும் சிறை சென்று வந்தால் அவர்கள் பதவியில் இருக்க முடியாது என்று சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இவ்வாறெல்லாம் ஒன்றிய பாஜக அரசு நயவஞ்சகமாக நடந்து கொள்கிறது.

கடந்த 60 வருடங்களாகவே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல, அவருடைய சாதனைகளுக்கு பின்பெல்லாம் தொண்டர்களாகிய நீங்கள் தான் இருக்கிறீர்கள். என் தந்தை எனக்கு கொடுத்த சொத்து இந்த மறுமலர்ச்சி சொந்தங்கள் தான். கடந்த 32 வருடங்களாகவே இந்த இயக்கத்தினை ஒரு சிலர் பிளவுபடுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது எப்போதும் முடியாது. பல வேடிக்கை மனிதரைப் போல நான் வீழ்வென்று நினைத்தாயோ” என்று பாரதியாரின் கவிதையைக் கூறி தன் பேச்சினை நிறைவு செய்தார்.