தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் வாரத்தில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அதன்படி கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். இதனையடுத்து இந்த வாரம் அதாவது நாளை (20.09.2025 - சனிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன் ஒரு பகுதியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் நாளை திருவாரூர் நகர்ப் பகுதியில் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோவில் தெருவில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக நாகப்பட்டினத்திற்கு நாளை காலை வருகை தர உள்ளார். அதன் பின்னர் அங்குள்ள அண்ணா சிலை அருகில் அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. முன்னதாக கடந்த வாரம் திருச்சியில் அவர் பரப்புரை மேற்கொண்ட போது அவரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வந்தனர். இதனால் அப்பகுதிகளில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக நாளை நடைபெற உள்ள பரப்புரைக் கூட்டத்திற்கு வருகை தரும் வகையில் யாருக்கும் தெரியாத வண்ணம் ரகசியமாக இன்று (19.09.2025) இரவு நாகப்பட்டினத்திற்கு அவர் சாலை மார்க்கமாக வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு அங்குள்ள தனியார் உணவகத்தில் விஜய் தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை காலை 11 மணியளவில் நாகபட்டினத்திலும், அதனைத் தொடர்ந்து மதியம் 3 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியிலும் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.