seeman Photograph: (ntk)
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய திருமாவளவன், ''தம்பி விஜய்யும், தம்பி சீமானும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது, பா.ஜ.கவின் பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சீமான் சொல்கிறார். அந்த தம்பிக்கு நான் சொல்கிறேன். நீங்கள் வெளிப்படையாக வந்துவிட்டீர்கள், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நீங்கள் தமிழ் தேசியம் தான் பேசுகிறீர்கள் என்று இவ்வளவு காலம் நாங்கள் நம்பி கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது, நீங்கள் இந்து தேசியம் பேசுகிறீர்கள் என்று. நீங்கள் இந்து தேசியம் கூட பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள். எவ்வளவு பெரிய ஏமாற்று நடவடிக்கை. பெரியாரை இழிவுப்படுத்துவதும், பெரியாரின் அரசியலை தகர்ப்பதுமா தமிழ் தேசியம்? இரண்டு பேர் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள்'' எனப் பேசியிருந்தார்.
இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக்கூட்டம் திருவேற்காட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் திருமாவளவனின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய சீமான், ''ஏனென்றால் பிரசவம் பார்த்தது எங்க அண்ணன் திருமாவளவன் தான். தம்பி விஜய்யும் என்னையும் பாஜக பெறும்போது பக்கத்தில் இருந்து பிரசவம் பார்த்து விட்டது எங்க அண்ணன்தான். புரியுதா? நான் யார் என்று நீங்கள் என்னிடம் தான் கேட்க வேண்டும். தமிழ் தேசியம் பேசி கொண்டிருந்தார் என்று நினைத்தேன் என்று என்னை சொல்கிறார். காலங்காலமாக என்னை போலி தமிழ் தேசியவாதி என்று தான் என்னை பேசினீர்கள்.
எங்களை போலி தமிழ் தேசியவாதிகள் என்று கூலி திராவிடர்கள் கூறித் திரிகிறார்கள் என்றுகூட நான் பேசினேன். பேசட்டும் விடுங்க. அவர் சொல்லி விட்டால் நான் ஆர்எஸ்எஸ், பிஜேபி ஆகிவிடுவேனா? அதை விடுங்க அண்ணன் தானே பேசிட்டு போறாரு'' என்றார்.
Follow Us