ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், “இந்த சூதாட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு பங்கு உண்டு” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தோனி, “சம்பத்குமாரின் பேச்சு தன்னுடைய பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் தனக்கு 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்” என சம்பத் குமாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இதனையடுத்து சம்பத்குமார், “தோனியின் இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும்” என உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “தற்போது இந்த வழக்கில் சாட்சி விசாரணை தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். எனவே சம்பத்குமாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனை எதிர்த்து சம்பத்குமார் தாக்கல் செய்து மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (31.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. அதோடு சம்பத்குமார் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/31/dhoni-hc-2025-10-31-15-52-52.jpg)