மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஸ்டேடியத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்தார்.
மதுரையில் வேலம்மாள் கல்விக் குழுமம் சார்பில் சுமார் 12.5 ஏக்கரில் சர்வதேச தரத்துடன் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று அமைக்கப்பட்டு வந்தது. அதன்கட்டுமான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கலந்துகொண்டு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்துள்ளார். மேலும் மைதானத்தில் பேட்டரி வாகனத்தில் வலம் வந்த, அவர் கூடியிருந்த ரசிகர்களை நோக்கிக் கையசைத்தார்.
முன்னதாக கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைப்பதற்காக தனி விமான மூலம் மதுரை வந்த தோனிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரை வந்த அவர் பின்னர் அங்கிருந்து வேலம்மாள் கல்விக் குழுமம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட அந்த கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார். சுமார் 325 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம் 30 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு அணிகளுக்கான வீரர்களுக்கு ஓய்வுஅறை, ஜிம் வசதி, ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ வசதி, கார் பார்க்கிங் வசதி, மழை வந்தாலும் விரைவில் மழைநீரை அகற்றி ஆட்டத்தைத் தொடரும் வசதி உள்ளிட்ட வசதிகளோடு சர்வதேச தரத்தில் கிரிக்கெட் ஸ்டேடியமானது அமைக்கப்பட்டுள்ளது.