2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதலே தீவிரமாகத் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் (விசிக), மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) ஆகிய கட்சிகள் மீண்டும் இணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம், எதிர்க்கட்சியான அதிமுக, பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மேலும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அமமுக அங்கம் வகித்து வந்த நிலையில், தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அண்மையில் ஒ.பன்னீர் செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியிருந்த தற்போது டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து விலகியிருப்பது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., “ஏற்கனவே குறிப்பிட்டது போல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக மட்டுமே இணைந்து செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் அரசியல் போக்குகள் தமிழகத்திற்கு எதிராக இருக்கும் போது, அந்த கூட்டணியில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் வெளியேறி இரண்டு பேர் மட்டுமே மிஞ்சுவார்கள் என்று கூறியிருந்தேன். அதுதான் தற்போது நடப்பதாக நம்புகிறேன். டிடிவி தினகரனின் முடிவும் அவரது எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும் என்று நான் நம்புகிறேன். வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.