Dhevanathan Yadav Case- Court warns Photograph: (bjp)
தேவநாதன் யாதவ் இயக்குநராக இருந்த 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்' நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டிருந்தனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தேவநாதன் யாதவ் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து தேவநாதன் உட்பட ஆறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
வழக்கிலிருந்து வெளியே வர தேவநாதன் தரப்பு தொடர்ந்து ஜாமீன் பெறும் முயற்சியில் இறங்கியது. தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தொடர்ந்த இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து தொடரப்பட்ட ஜாமீன் கோரிய வழக்கில் ஓராண்டுக்கு மேலாக முன்னேற்றம் இல்லாததால் ஏன் தேவநாதனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்த நீதிமன்றம் அக்டோபர் 30 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் 10 லட்சம் ரூபாய் ஜாமீன் உத்தரவாதமும், அதே தொகைக்கான இரண்டு நபர்களின் ஜாமீன் உத்தரவாதமும் வேண்டுமென தெரிவித்ததோடு, சொந்த பணமாக 100 கோடியை நிதி நிறுவனம் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து அக்டோபர் 30 ஆம் தேதி வரை தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
மீண்டும் இந்த இடைக்கால ஜாமீன் வழக்கு நீதிபதி ராஜசேகரிடம் விசாரணைக்கு வந்தபோது இடைக்கால ஜாமீன் அக்.30 ஆம் தேதியில் இருந்து மேலும் ஒருவார காலம் நீட்டிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை நீதிபதி ஜெயசந்திரன் விசாரிக்க பட்டியலிடும்படி நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் வழக்கு பட்டியலிடப்படாததால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பு வழக்கறிஞர் 'தேவநாதனுக்கு கொடுத்த நிபந்தனைப்படி 100 கோடி ரூபாயை அவர் இதுவரை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யவில்லை. நீதிமன்றத்திலும் சரணடையவில்லை' என முறையிட்டார்.
இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த நீதிபதி, நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறை கைது செய்யும் என தேவநாதனுக்கு வார்னிங் கொடுத்துள்ளார்.
Follow Us