தமிழகக் காவல்துறையின் மிக உயர்ந்த பதவியான சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி (30.06.2023) முதல் சங்கர் ஜிவால் பணியாற்றி வந்தார். இத்தகைய சூழலில் தான் சங்கர் ஜிவால் நேற்றுடன் (31.08.2025) பணி ஓய்வு பெற்றார். இதற்கிடையே தமிழகத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காவல்துறை தலைமையகத்தில் சங்கர் ஜிவால், பொறுப்பு டி.ஜி.பி.யாக பதவியேற்ற ஜி. வெங்கட்ராமனிடம் நேற்று முறைப்படி பொறுப்புகளை ஒப்படைத்தார். 

Advertisment

அதனைத்தொடர்ந்து பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கட்ராமன் கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் காவல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் டிஜிபி அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் தொடர்பாக பிரகாஷ் சிங் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதில், “ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறுவதற்கு முன், அடுத்த டிஜிபியாக பதவியேற்க உள்ளவரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலை 3 மாதங்களுக்கு முன்னதாக யு.பி.எஸ்.சி.க்கு அனுப்ப வேண்டும்” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என தெரிவித்து சமூக செயற்பாட்டாளரும் , மனித உரிமை ஆர்வலருமான ஹென்ரி திபேன் சார்பில் வழக்கறிஞர் பிரசன்னா என்பவர் தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், “பிரகாஷ் சிங் வழக்கில் அளித்த தீர்ப்பிற்கு மாறாக தமிழ்நாடு அரசு தமிழகத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி நியமனத்தில் நடந்து கொண்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாக கருத வேண்டும்” எனத் தெரிவித்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.