பழைய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் துர்க்கை அம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா இக்கோயிலில் வெகு விமர்சையாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டின் நவராத்திரி விழா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இக்கோயிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நவராத்திரியின் 5ஆம் நாளான இன்று (26-09-25) அம்மனுக்கு பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதில் ரூ.1, ரூ.5, ரூ.50, ரூ.100 நோட்டுகளுடன், ரூ.500, ரூ.1,000 என பழைய ரூபாய் நோட்டுகளையும் சேர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாது என அறிவிக்கப்பட்ட தாள்களுக்கு மாற்றாக 2 ஆயிரம் ரூபாய் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.