விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. விசேஷ நாட்களில் இக்கோவிலுக்கு பக்தர்கள் அதிகமாக படை எடுப்பர். மலைப்பாதை வழியாக கோவிலுக்கு செல்ல வேண்டி இருப்பதால் மழைக்காலங்களில் காற்றாட்டு வெள்ளம் ஏற்படும் அபாயம் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சில நேரங்களில் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதித்து வருவது வழக்கம்.
ஆடி மாத அமாவாசை விழா சதுரகிரி கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கூட லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் நாளை நடைபெற இருக்கிறது. இதனால் இன்று காலை முதலே சதுரகிரி மலை அடிவாரப் பகுதிக்கு அதிகப்படியான பக்தர்கள் வருகை தந்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்து கட்டுப்பாடு விதித்திருந்தது. இந்நிலையில் அனுமதியளித்த நேரத்தைத் தாண்டியும் பக்தர்கள் குவிந்ததால் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பக்தர்கள் மலையேற அனுமதி மறுத்தனர். இதனால் அந்த பகுதியில் குவிந்த பக்தர்கள் அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்ட காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.