சிதம்பரம் நடராஜர் கோயிலின் கனக சபையில் பொதுமக்களை அனுமதிக்க முடியாது என தீட்சிதர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சாதிய வன்மம் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் கருவறை முன்புள்ள கனக சபையில், பல ஆயிரம் ஆண்டுகளாக பக்தர்கள் நின்று தரிசனம் செய்து வருகின்றனர். இதற்கு கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை விதித்தனர். இதை எதிர்த்து, பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி, தமிழக அரசு கனக சபையில் அனைவரும் தரிசனம் செய்யலாம் என அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணையை எதிர்த்து, கோயில் தீட்சிதர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கனக சபையில் தரிசனம் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறையினருக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கள ஆய்வு மேற்கொண்ட அறநிலையத் துறையினர், கோயிலில் உள்ள கனக சபையில் சில மாற்றங்கள் செய்தால், ஒரு நாளைக்கு 4,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் எளிமையாக சாமி தரிசனம் செய்ய முடியும் என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (11.9.2025) நீதிபதிகள் ஆர். சுரேஷ் குமார், எஸ். சௌந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீட்சிதர்கள் தரப்பில், கனக சபையில் நின்று தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், கனக சபையில் விஐபிகள் மற்றும் தீட்சிதர்கள் மட்டுமே தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் வாதிடப்பட்டது.
அதற்கு, அறநிலையத் துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர், தீட்சிதர்கள் தரப்பில் கனக சபையில் நின்று தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதை ஏற்க முடியாது என்றும், 2008 முதல் பக்தர்கள் கனக சபையில் ஏறி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். மேலும், தட்டுக் காணிக்கை மூலம் கோயிலை நிர்வகித்து வருவதாகக் கூறும் தீட்சிதர்கள், பக்தர்களை கனக சபையில் ஏற அனுமதிக்க மாட்டோம் எனக் கூற முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இதனிடையே, நீதிபதிகள், பக்தர்களுக்கு கனக சபையில் அனுமதி இல்லை என்பதை மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். இந்நிலையில், கோயிலில் பக்தர்கள் வழங்கும் காணிக்கை பணத்தை வைத்து ஒரு நாளைக்கு பல லட்ச ரூபாய் சம்பாதிக்கும் தீட்சிதர்கள், கனக சபையில் பொதுமக்களைத் தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் கூறியிருப்பது சாதிய வன்மம் என்று அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், பொதுமக்கள், பக்தர்கள் கனக சபையில் தரிசனம் செய்யும்போது, பெண்கள் கூட்டமாகவும், ஆண்கள் மேல் சட்டை இல்லாமலும் தரிசனம் செய்கின்றனர். ஐந்து நிமிடங்களுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி தரிசனம் செய்யும்போது, வியர்வை நாற்றம் தாங்க முடியவில்லை என தீட்சிதர்கள் உடல் மொழியிலும், ரகசிய வார்த்தைகள் மூலமும் கீழ்த்தரமாகப் பேசிக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி, தீட்சிதர்கள் மற்றும் விஐபிகளுக்கு மட்டும் கனக சபையில் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். இதற்கு, தமிழக அரசு, ஆண்டாண்டு காலமாக பொதுமக்களும் பக்தர்களும் கனக சபையில் ஏறி தரிசனம் செய்தது போலவே தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.