மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகாயுதி’ என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார்.

Advertisment

இம்மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கூட்டணி எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இதனிடையே, பா.ஜ.க - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணி விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீநாத் ஷிண்டே வருமானத்திற்கு சொத்து வைத்திருப்பதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை, ஸ்ரீநாத் ஷிண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது, ஏக்நாத் ஷிண்டேவின் உதவியாளர் அமித்ஷங்கே மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது ஆகியவற்றால் ஏக்நாத் ஷிண்டே கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, சில தினங்களுக்கு டெல்லிக்குச் சென்ற ஏக்நாத் ஷிண்டே, கூட்டணி அரசியலில் இருந்து விலகி வெளியே இருந்து ஆதரவு தருவதாக பா.ஜ.க தலைமையிடம் கூறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மகாயுதி கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் ஊகங்களை மேலும் அதிகரிக்கும் விதமாக, சுதந்திர தினக் கொடியேற்றும் முக்கியப் பணிகளை பா.ஜ.க மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு மாநில அரசு ஒதுக்கியிருப்பது பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த தினத்தையொட்டி, ஒவ்வொரு மாநில முதல்வர்களும் மாநிலத் தலைமைச் செயலகத்தில் கொடியேற்றுவார்கள். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மற்றும் நாசிக்கில் சுதந்திர தினக் கொடியேற்றும் முக்கியப் பணிகளை பா.ஜ.க மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ‘ஆகஸ்ட் 15ஆம் தேதி ராய்க்காட்டில் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் அதிதி தட்கரே தேசியக் கொடியை ஏற்றுவார். அதே நேரத்தில் பா.ஜ.க அமைச்சர் கிரிஷ் மஹாஜன் நாசிக்கில் விழாவை நிகழ்த்துவார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த மாவட்டங்களில் பாதுகாவலர் அமைச்சர் பதவிகள், நிர்வாகம் மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகள் தொடர்பாக கூட்டணி அமைச்சர்களிடையே மோதல் நடந்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவால், மகாயுதி கூட்டணிக்குல் ஏற்பட்டுள்ள விரிசல் மேலும் வலுவடைந்துள்ளதாக்க கூறப்படுகிறது.