மகாராஷ்டிராவில் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைத்து சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பு வகித்தார். இரண்டரை ஆண்டுக்கு பின், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.

இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து, சிவசேனா என்ற கட்சி ஏக்நாத் ஷிண்டே வசமானது. உத்தவ் தாக்கரே சிவசேனா அணி என்ற பெயரோடு உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாரும் துணை முதல்வர்களாகவும் பதவி வகித்து வருகின்றனர். 2024 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, எந்த ஒரு கட்சியும் முழுமையான எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து பெறவில்லை. இருப்பினும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி எதிர்க்கட்சிகளாக உள்ளன. இதற்கிடையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்தது.

Advertisment
devu
Devendra Fadnavis' call Uddhav, come to our side that caused a stir

இந்த நிலையில், கூட்டணிக்கு வருமாறு உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அழைப்பு விடுத்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அம்பதாஸ் தன்வேவின் பிரியாவிடை நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது தேவேந்திர பட்னாவிஸ் உத்தவ் தாக்கரேவை பார்த்து, “பாருங்கள் உத்தவ் ஜி, 2029ஆம் ஆண்டு வரை நாங்கள் எதிர்க்கட்சிக்கு செல்ல வாய்ப்பில்லை. ஆனால், நீங்கள் இங்கு வர விரும்பினால் அதை பரிசீலிங்கள். அது உங்களை பொறுத்தது, அதை பரிசீலிக்கலாம்” என்று கூறினார்.

Advertisment

இந்த கருத்தைக் கேட்டு அங்கிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் சிரித்தனர். அதையடுத்து பேசிய பட்னாவிஸ், “அம்பதாஸ் தன்வே, ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என எங்கும் இருக்கலாம். ஆனால், அவரது உண்மையான எண்ணங்கள் வலதுசாரி தான்” என்று கூறினார். எதிர்க்கட்சியில் இருக்கும் உத்தவ் தாக்கரேவை மாநில முதல்வர் கூட்டணிக்கு அழைத்திருந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து உத்தவ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அதை விட்டுவிடுங்கள், சில விஷயங்களை எளிதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறிச் சென்றார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, தேவேந்திர பட்னாவிஸ் உத்தவ் தாக்கரேவும் ஒருவரையொருவர் அன்புடன் வாழ்த்திக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இரு தலைவர்களும் கைகுலுக்கி புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர்.