மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள தேவநாதனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.
தேவநாதன் இயக்குநராக இருந்த 'தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட்' நிறுவனத்தில் பலர் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டிருந்தனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தேவநாதன் யாதவ் மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து தேவநாதன் உட்பட ஆறு பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வழக்கிலிருந்து வெளியே வர தேவநாதன் தரப்பு தொடர்ந்து ஜாமீன் பெறும் முயற்சியில் இறங்கி வருகிறது. தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் அவரது ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 'தேவநாதன் யாதவிடம் சுமார் 2000 கிலோ தங்கம் இருக்கிறது. தேவநாதன் குறித்து தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களில் அந்த 2000 கிலோ தங்கம் குறித்த ஆவணங்கள் இடம்பெறவில்லை. அந்த 2000 கிலோ தங்கத்தை கைப்பற்றினாலே தங்களுக்கு கொடுக்கவேண்டிய பணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க முடியும்' என தெரிவித்தார்.
அப்பொழுது பொருளாதார குற்றப்பிரிவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 'நீதிமன்றத்தில் தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த 300 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் அதிகமான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள் என தெரிய வந்துள்ளது' என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஓராண்டுக்கு மேலாக முன்னேற்றம் இல்லாததால் ஏன் தேவநாதனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்த நீதிபதி அக்டோபர் 30 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் 10 லட்சம் ரூபாய் ஜாமீன் உத்தரவாதமும், அதே தொகைக்கான இரண்டு நபர்களின் ஜாமீன் உத்தரவாதமும் வேண்டுமென தெரிவித்ததோடு, சொந்த பணமாக 100 கோடியை நிதி நிறுவனம் வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிதி நிறுவனம் மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்து அக்டோபர் 30 ஆம் தேதி வரை தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.