பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

இத்தகைய சூழலில் தான் நேற்று (11-07-25) விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம்  மாவட்டச் செயலாளர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, “நேற்று முன் தினம் எனது வீட்டில் ஒட்டுக்கேட்கும் கருவி இருந்தது கண்டறிந்து எடுத்துள்ளோம். வீட்டில் நான் அமரும் நாற்காலிக்கு அருகே ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு இருந்தது. லண்டனில் இருந்து வாங்கி வரப்பட்ட விலை உயர்ந்த ஒட்டு கேட்கும் கருவியை என் நாற்காலிக்கு அருகில் வைத்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறி வருகிறது.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் வீட்டிற்கு தனியார் துப்பறியும் குழுவினர் இன்று (12-07-25) ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே பா.ம.க வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழக முதல்வராக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் இறக்குவதற்கான நாள் குறிக்கக்கூடிய நாளாக 20ஆம் தேதி விழுப்புரத்தில் மாபெரும் போராட்டம் நடைபெறும். அது தான் எங்களுடைய நோக்கம். வன்னிய மக்களுக்கு செய்திருக்கக்கூடிய துரோகம் என்பது சாதாரணமானது அல்ல. பிற்படுத்தப்பட்ட ஆணையத்தை அமைப்பதற்காக அவர் முயற்சி மேற்கொண்டார்.

உரிய தரவுகளை திரட்டி 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இருந்து வன்னியர்களுக்கு பிரித்துக் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன் காரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்து நீதியரசர் பாரதிதாசனை நியமனம் செய்தது. அதனுடைய அரசாணை என்பது இப்போது வந்துள்ளது. ஆனால் அதற்கு பிறகு தமிழக அரசு, மாநில அரசிற்கு உரிமை இல்லை, இதை எங்களால் இப்போது தர முடியாது, மத்திய அரசு தான் இந்த விவரங்களை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. ஒரு பச்சை துரோகத்தை தமிழக முதல்வரும், தமிழக அரசும் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.