கரூரில், த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் நேற்று (03-10-25) விசாரணைக்கு வந்தது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கரூரில் நடந்த சம்பவம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும் நீதிமன்றம் இதைக் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இருக்க முடியாது என்றும் குழந்தைகள் பலியான நிலையில், கட்சி தொண்டர்களை, ரசிகர்களைப் பொறுப்பற்ற முறையில் கைவிட்டு விட்டு ஓடிய, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்குத் தலைமைப் பண்பு இல்லை என்றும் கூறி தவெக கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், கரூர் சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்து உத்தரவிட்டார்.

Advertisment

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றவர்களின் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், எஸ்.பிக்கள் விமலா, சியாமளா தேவி ஆகிய 2 பெண் எஸ்.பிக்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவில், ஏடிஎஸ்பிக்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகளும் சேர்க்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான கோப்புகளை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் இன்று ஒப்படைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.