கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரை கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை குறித்தும், உயிர்ச்சேதம் ஏற்படும் சூழல் உருவாகலாம் என பலமுறை எச்சரித்தும் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான எஃப்ஐஆர் பதிவும் வெளியாகி உள்ளது. அரசியல் பலத்தை பறைசாற்ற கரூருக்கும் விஜய் தாமதமாக வந்ததாக காவல் துறை தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கரூர் எல்லையான வேலாயுதபாளையத்திற்கு மாலை 4:45 மணிக்கே வந்த விஜய், வேலுச்சாமிபுரம் வர 4 மணிநேரம் தாமதப்படுத்தியுள்ளார்.
விஜய் வருகை தாமதமானால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் வெயிலின் தாக்கத்தால் சோர்வடைந்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என காவல்துறை எச்சரித்தும் தவெகா நிர்வாகி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. நீண்ட நேர காத்திருப்பு, நீர், மருத்துவ வசதி இல்லாதது, அதிக கூட்டத்தால் கூடியிருந்த மக்களிடையே சோர்வு ஏற்பட்டது' என காவல்துறை விளக்கமளித்துள்ளது.