திருவண்ணாமலையில் தி.மு.க வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 41 தொகுதிகளுக்கான தி.மு.க பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 41 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக முகவர்கள் பங்கேற்றனர். இதில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறுகின்ற வடக்கு மண்டல பாக முகவர்கள், பூத் நிர்வாகிகள், பூத் டிஜிட்டல் ஏஜென்டுகள் உங்களை எல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். 12 மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த 41 சட்டமன்றத் தொகுதிகளில் பணியாற்றக்கூடிய, 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாக முகவர்கள் இங்கே கூடியிருக்கிறீர்கள். திருவண்ணாமலை என்பது நம் திமுகவின் வரலாற்றில் மிக மிக முக்கியமான ஊர். 1963-இல் திருவண்ணாமலை இடைத்தேர்தலில் கழகம் பெற்ற வெற்றிதான் 1967-இல் நம் கழகம் முதன்முதலாக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்த வெற்றி. 1963-ஆம் ஆண்டு இடைத்தேர்தலுக்கு நம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரை, பேரறிஞர் அண்ணா தேர்தல் பொறுப்பாளராக நியமித்தார். பல நாட்கள் கலைஞர் இங்கு வந்து தங்கி, தேர்தல் பணிகளைச் செய்து, தனது நண்பர் ப.உ.சண்முகத்தை கலைஞர் தான் வெற்றி பெறச் செய்தார்.
திருவண்ணாமலை இடைத்தேர்தல் வெற்றிதான் தி.மு.க-வால் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை, கழகத் தொண்டர்களுக்குக் கொடுத்தது. 1957-இல் கழகம் முதன்முறையாக போட்டி போட்டது. அப்போது வெற்றிபெற்ற 15 பேரில், 3 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே, திருவண்ணாமலையையும், நம் திமுகவையும் பிரித்துப் பார்க்க முடியாது. இன்றைக்கு தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய ஓர் இயக்கமாக திமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அன்றைக்கு திமுகவிற்கு நம்பிக்கை ஊட்டிய ஊராக இந்த திருவண்ணாமலை திகழ்ந்தது. அப்படிப்பட்ட பெருமையான திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. உங்களை சந்தித்துப் பேசுகின்ற இந்த சிறப்பான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்த மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலுவுக்கும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எ.வ.வேலுவைப் பொறுத்தவரைக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன்பிற்குரிய தம்பி. நம் கழகத் தலைவருக்கு, உடன் பிறவாத ஒரு அண்ணன். ‘எ.வ.வேலு என்றாலே ஏவாமலே எதையும் செய்வார்’ என்று கலைஞராலும், ‘எதிலும் வல்லவர்’ என்று நம் கழகத் தலைவராலும் போற்றப்பட்டவர். இன்று காலையில்கூட ஒரு நிகழ்ச்சியில் பேசும்பொழுது, சொன்னேன். அண்ணன் எ.வ. என்றால், எதிலும் வல்லவர் மட்டுமல்ல, எப்போதும் வல்லவர், எங்கேயும் வல்லவர் என்ற சிறப்புக்குரியவர். திருவாரூரில் இருக்கின்ற கலைஞர் கோட்டமாக இருக்கட்டும், சென்னை மெரினா கடற்கரையில் இருக்கின்ற கலைஞர் நினைவிடமாக இருக்கட்டும், எல்லாவற்றையும் மிகுந்த கலை உணர்வோடு கட்டி முடித்தவர் அண்ணன் எ.வ.வேலு. இன்றைக்கு அவருக்கே உரிய அந்தத் தனித்தன்மையுடன் இவ்வளவு சிறப்பாக தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஒரு மண்டலத்திற்கான பாக முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியோடு இங்கு நடத்திக்காட்டி இருக்கிறார். சில கட்சிகளில் பூத் ஏஜெண்டே இன்னும் நியமிக்காமல் இருக்கிறார்கள். அவர்களால் நியமிக்க முடியாத நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு நாம் பூத்தில் டிஜிட்டல் ஏஜென்டை நியமித்திருக்கிறோம். அந்த அளவிற்கு தொழில்நுட்பத்திலும் இன்றைக்கு திமுக தான் முதல் இயக்கமாக நடைப்போட்டுக் கொண்டிருக்கிறது. பூத் ஏஜென்ட் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தையே, இன்றைக்கு ஒரு மாநாடு போல நடத்தி இருக்கிறார் அண்ணன் எ.வ.வேலு.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/14/u2-2025-07-14-07-32-41.jpg)
அடுத்த ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். அந்தத் தேர்தல் வெற்றி விழாவை, அண்ணன் எவ்வளவு பிரம்மாண்டமாக நடத்தப் போகிறார் என்பதை நினைத்துப் பார்த்தாலே வியப்பாக இருக்கிறது. நான் அடிக்கடி சொல்வதுண்டு. பூத் நிர்வாகிகளான நீங்கள்தான் நம் கழகத்தின் ரத்த நாளங்கள். நீங்கள் சரியாகச் செயல்பட்டால்தான் கழகத்திற்கு வெற்றியோ, தோல்வியோ கிடைக்கும். கழகம் துடிப்போடும், வேகத்தோடும் செயல்படுவதற்கு பூத் நிர்வாகிகளாகிய நீங்கள்தான் காரணம். இந்த பூத் பொறுப்பு என்பது ஒரு சாதாரண பொறுப்பு கிடையாது. முழுக்க முழுக்க திறமை உள்ளவர்கள்தான் இந்தப் பொறுப்புக்கு வர முடியும், வந்து இருக்கிறீர்கள். பல தேர்தலில், வேலை பார்த்த நீண்ட அனுபவம் உள்ள பூத் ஏஜென்ட்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். உங்களில் பலர் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை மனப்பாடமாக சொல்லக்கூடிய திறமையைப் பெற்று இருப்பீர்கள். உங்களின் அனுபவமும் உழைப்பும்தான் களத்தில் தி.மு.க-வை இன்னும் வலிமையான இயக்கமாக இயக்கிக் கொண்டிருக்கிறது. எனவே உங்களின் பணி அடுத்த எட்டு மாதங்களுக்கு மிக மிக முக்கியம். நம் அரசின் திட்டங்களை, சாதனைகளை வீடு வீடாக நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும். இன்றைக்கு நம் திராவிட மாடல் அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்களால் இந்தியாவிலேயே வளர்கின்ற மாநிலங்களில் தமிழ்நாடு நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. அதற்குக் காரணம், நம் திராவிட மாடல் அரசும், நம் முதலமைச்சரும்தான்.
ஒவ்வொரு அரசுக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கும். உதாரணத்திற்கு பாசிச பா.ஜ.க. அரசை எடுத்துக் கொண்டீர்கள் என்றால், அதை ‘பாசிச மாடல் அரசு’ என்று சொல்வார்கள். கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க அரசை, ‘அடிமை மாடல் அரசு’ என்று சொல்வார்கள். நம் அரசை நாம் பெருமையாக ‘திராவிட மாடல் அரசு’ என்று சொல்கிறோம். நமது ஆட்சி அமைந்ததும் தலைவர் இட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணம் திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் இந்த நான்கு வருடங்களில் மட்டும் 730 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். அதுதான் அந்த திட்டத்தின் வெற்றி. பெண்கள் பள்ளிக்கூடம் படித்தால் போதாது, உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக தலைவர் உருவாக்கிய திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து, உயர்கல்வி படிக்க எந்தக் கல்லூரியில் சென்று படித்தாலும் அவர்களின் வங்கிக்கணக்கில் மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 8 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். பெற்றோர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் நம் முதலமைச்சர் உருவாக்கிய திட்டம்தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். ‘என் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு நம் திராவிட மாடல் அரசு இருக்கிறது, நம் முதலமைச்சர் இருக்கிறார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தில் நல்ல தரமான உணவு வழங்கப்படுகிறது’ என்று பெற்றோர்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக, தைரியமாக பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 20 லட்சம் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள்.
இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கின்ற திட்டம் என்றால், அதுதான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம். கடந்த 22 மாதங்களாக நம் முதலமைச்சர் கொடுத்துவிட்டார். மாதந்தோறும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் 22 மாதமாக அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் இன்னும் ஓரிரு நாட்களில் வந்துவிடும். அதுமட்டுமல்ல, இன்னும் கூடுதலானோருக்கு மகளிருக்கு உரிமைத்தொகை கொடுக்கும் நோக்கில் வருகின்ற 15-ஆம் தேதி ‘உங்களுடன் முதலமைச்சர்’ என்ற சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள அத்தனை மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விரைவில், இன்னும் இரண்டு மாதங்களில் வழங்கப்படும். இந்தத் திட்டங்களுக்கெல்லாம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இதனால்தான் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு, தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து தொந்தரவுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை என்று ஒன்றை கொண்டு வருகிறார்கள். அதன்மூலம் குறுக்கு வழியில் மீண்டும் இந்தித் திணிப்பை தமிழ்நாட்டிற்குள் நுழைக்கப் பார்க்கிறார்கள். தொகுதி மறுவரையறை என்று சொல்லி மக்களவைத் தொகுதிகளை குறைக்கப் பார்க்கிறார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/14/u3-2025-07-14-07-33-04.jpg)
தமிழ்நாட்டின் நிதி உரிமையைப் பறிக்கின்ற வேலையைத் தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க அரசு வெளிப்படையாகச் செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவராக நம் முதலமைச்சர் இருக்கிறார். இதையெல்லாம் மக்களிடம் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். தி.மு.க. ஏன் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும், அடிமை அ.தி.மு.க. - பா.ஜ.க. ஏன் ஆட்சி வரக்கூடாது என்பதையெல்லாம் எடுத்துச்சொல்லி, மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதற்காகத்தான் தலைவர் 10 நாட்களுக்கு முன்பு ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அறிவித்தார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்கின்ற 30 சதவிகித வாக்காளர்களை, திமுகவில் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்பது இந்த முன்னெடுப்பின் இலக்கு. தலைவரே நேரடியாகக் களத்தில் இறங்கி, வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்த்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு திருவாரூர் செல்லும்போது, திருவாரூரிலும் வாக்காளர்களைச் சந்தித்து, கழகத்தில் இணைய வைத்தார். என்னுடைய தொகுதி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியிலும் அந்த முன்னெடுப்பை நான் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். இந்தியாவிலேயே எந்தவொரு இயக்கத்திலும் இல்லாத வகையில் இந்த முன்னெடுப்பின் மூலம் பூத் டிஜிட்டல் ஏஜென்டுகள் செயல்பட்டு வருகிறீர்கள். ஓரணியில் தமிழ்நாடு என்ற மிகப்பெரிய இலக்கை அடைந்து விட்டோம் என்றால்,, நமது வெற்றியில் 50 சதவிகிதம் உறுதி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பின் கீழ் கடந்த 10 நாட்களில் மட்டும் 91 லட்சம் உறுப்பினர்களை கழகத்தில் நாம் சேர்த்திருக்கிறோம். 11 லட்சம் உறுப்பினர்கள் இந்த மண்டலத்தில் மட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு இந்த நேரத்தில் எனது வாழ்த்துக்கள்.
இங்கு அண்ணன் வேலு பேசும்பொழுது குறிப்பிட்டுச் சொன்னார். இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே 234 தொகுதிகளில் அதிகமான உறுப்பினர்களை சேர்த்த சட்டமன்றம் இந்த மண்டலத்தில் வருகிறது என்று சொன்னார். அந்த சட்டமன்றத் தொகுதி ரிஷிவந்தியம். கிட்டத்தட்ட 1 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்களை நீங்கள் சேர்த்து இருக்கிறீர்கள். அதற்கு இந்த நேரத்தில் எனது வாழ்த்துகள். இந்த நேரத்தில் இன்னொன்றை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு நீங்கள் முதலிடத்தில் இருக்கிறீர்கள். இன்னும் 45 நாட்கள் இருக்கின்றன. உங்களுக்குள் அந்தப் போட்டி இருக்க வேண்டும். இந்த மாவட்டத்திலேயே ‘நானா, நீயா’ என்று பார்த்து விடலாம் என்ற போட்டி இருக்க வேண்டும். இந்த மண்டலத்திலேயே என் மாவட்டமா, உன் மாவட்டமா என்று பார்த்து விடுவோம் என்ற போட்டி இருக்க வேண்டும். எந்தக் கட்சியாக இருந்தாலும், மாற்றுக் கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், அவரின் வீட்டிற்குச் சென்று அரசின் சாதனைகளை, முதலமைச்சரின் சாதனைகளை உங்கள் மாவட்டத்தில் இருக்கின்ற அரசுப் பணிகளை அந்த வாக்காளர்களுக்கும் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். பாசிஸ்ட்டுகளின் மக்கள் விரோதப் போக்கை, அடிமைகளின் துரோகத்தை மக்களுக்கு நீங்கள் புரிய வைக்க வேண்டும். நாம் களத்தில் இறங்கி, தேர்தல் பந்தயத்தில் யாராலும் பிடிக்க முடியாத வேகத்தில் முதலிடத்தில் போய்க்கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பார்த்துத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதற்றம் வந்துவிட்டது. நம் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை அவர் விமர்சனம் செய்கிறார். தி.மு.ககாரர்கள் தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டு மக்களின் வீட்டுக்கதவுகளை எல்லாம் தட்டுகிறார்கள் என்று விமர்சனம் செய்திருக்கிறார். நாம் தமிழ்நாட்டு மக்களின் கதவுகளை உரிமையோடு தட்டுகிறோம். எடப்பாடி பழனிசாமி மாதிரி, அமித் ஷா வீட்டுக் கதவையோ அல்லது கமலாலயம் கதவையோ திருட்டுத்தனமாக சென்று தட்டவில்லை.
மக்களுக்கு இந்த நான்கு வருடத்தில் பல பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். அந்த தைரியத்துடன் சென்று தட்டுகிறோம். ஏனென்றால், தி.மு.க. என்பது மக்கள் இயக்கம். ‘மக்களிடம் செல், மக்களிடம் பழகு’ என்றுதான் நம் பேரறிஞர் அண்ணா நமக்கு கற்றுக் கொடுத்தார். கழகத்திற்கு மக்கள் கொடுக்கின்ற ஆதரவைப் பார்த்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் என்னென்னமோ உளறுகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டத்தில் பேசுகிறார். தி.மு.க.காரன் யாராவது போன் நம்பர் கேட்டால், கொடுத்து விடாதீர்கள். இதுதான் எதிர்க்கட்சி தலைவரின் பிரச்சாரம். தமிழ்நாட்டு மக்கள் நம் திமுகவை நோக்கி, நம் தலைவரை நோக்கி பேராதரவு தந்து வருவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. பா.ஜ.க.-வோடு இனி எந்தக் கூட்டணியும் இல்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த மாதமே டெல்லிக்குச் சென்று நான்கு கார்கள் மாறிச்சென்று கள்ளக் கூட்டணி வைத்துவிட்டு வந்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்றைக்கு அது வெளியே வந்துவிட்டது. அமித் ஷா ஒவ்வொரு நாளும் சொல்கிறார் ‘கூட்டணி ஆட்சிதான்’ என்று. எடப்பாடி பழனிசாமி அடுத்த நாள் சொல்கிறார் ‘கிடையாது, தனித்துவமான ஆட்சிதான்’ என்று. இப்படி அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் போட்டி போட்டுக் கொண்டு, இப்படி செய்து கொண்டிருந்தார்கள் என்றால், தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது அந்தக் கூட்டணி. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா பெயரில் கட்சியை வைத்துக்கொண்டு, சுயநலத்துக்காக அமித் ஷாவிடம் மொத்தமாக கட்சியை அடமானம் வைத்து விட்ட எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சிரிக்கிறார்கள்.
மூன்று நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசுகிறார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக கல்லூரிகள் கட்டலாமா? இது எவ்வளவு பெரிய அநியாயம் என்று பேசியிருக்கிறார். கோயில் நிதியில் ஏழை, எளிய பிள்ளைகள் படிக்க கல்லூரி தொடங்கினால், எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது? இந்து சமய அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று சொல்கின்ற பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்ததால், இன்றைக்கு எடப்பாடி பழனிசாமிவும் ஒரு முழு சங்கியாக மாறி இருக்கிறார். இன்றைக்கு அவரின் பேச்சுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு வந்ததால், நான் அப்படிப் பேசவில்லை என்று மழுப்பிக் கொண்டிருக்கிறார். அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும்போது, வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையோடுதான் ஆரம்பித்தார். ஆனால், இன்றைக்கு முழுமையாக காவிச்சாயத்துடன் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இனிமேல் அதை மூடி மறைத்து எந்தப் பயனும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, நீங்கள் தமிழ்நாட்டிற்குள் பா.ஜ.க-விற்கு பாதை போட்டு கொடுக்கலாம் என்று பார்க்கிறீர்கள். அதை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் அனுமதிக்க மாட்டார்கள். உங்களின் அந்த எண்ணத்தை கருப்பு-சிவப்பு வேட்டி கட்டிய எங்களின் திமுகவின் உடன்பிறப்பு நிச்சயம் விடவே மாட்டார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நின்று அடிமைகளையும், பாசிஸ்டுகளையும் வீழ்த்தப்போவது உறுதி. அதற்கான பணிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கவனத்துடன் களம் இறங்க வேண்டும். தினசரி வாக்காளர் பட்டியலை வீடு வீடாகச் சென்று சரி பாருங்கள். வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களைச் சேருங்கள், போலி வாக்காளர்களை நீக்குங்கள். உங்கள் பூத்தில் இருக்கின்றவர்களுடன் குடும்பத்தோடு, குடும்பமாகப் பழகுங்கள். அவர்களுக்கு உங்கள் மீது அந்த நம்பிக்கை வர வேண்டும். அவர்கள் கேட்கின்ற உதவிகளைச் செய்து கொடுங்கள். உங்களால் முடியாததை உங்களின் மாவட்ட அமைச்சர், இல்லை மாவட்டக் கழகச் செயலாளரிடம் கொடுத்து, செய்து கொடுக்க முயற்சி செய்யுங்கள். 2026-ல் கழக அணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லும் என்று நம் தலைவர் நமக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொடுத்துள்ளார். உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கையில்தான் தலைவர் அந்த முடிவை எடுத்தார்கள். அந்த நம்பிக்கையை இங்கு வந்து இருக்கின்ற கழக உடன்பிறப்புகள் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அடுத்து வருகின்ற இந்த எட்டு மாதம் மிக மிக முக்கியமான மாதம். கழகம் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்றால், இந்த மண்டலத்தில் இருக்கின்ற 41 தொகுதிகளில் நீங்கள் வெற்றியைத் தேடி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் பணிகளை நீங்கள் செய்துகாட்டினால், கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைத்து, நம் தலைவர் தொடர்ச்சியாக, இரண்டாவது முறையாக முதலமைச்சர் நாற்காலியில் உட்காரப் போவது உறுதி. நிச்சயம் நாம் வெற்றி பெறப்போவது உறுதி, நம் தலைவர் மீண்டும் முதலமைச்சராக உட்கார போவது உறுதி. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. நான் எந்த நம்பிக்கையில் சொல்கிறேன் என்றால் இங்கு வந்து இருக்கின்ற உடன்பிறப்புகள், களப்பணியாளர்கள் உங்கள் மீது இருக்கின்ற நம்பிக்கையில்தான் அதை நான் சொல்கிறேன். ‘வெல்வோம் இருநூறு, படைப்போம் வரலாறு’ என்று கூறிக்கொண்டு, இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்” என்றார்.