வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் சூழலில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், பருவமழை முன்னேற்பாடுகள் திமுகவினருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (22-10-25) அதிகாலை வரையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளுக்கு தேவையான உத்தரவுகள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், “டெல்டா மாவட்டங்களில் பொறுப்பாளர்களாக அமைச்சர்களை முதல்வர் அனுப்பி வைத்திருக்கிறார். மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம். அதே போல் அனைத்து இடங்களிலும் நிவாரணப் பொருட்கள் தயாராக இருக்கிறது. இன்று காலை 4 மணியில் இருந்து எங்கெங்கு உணவு தேவையோ அங்கெல்லாம் மக்களுக்கு வழங்கி வருகிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து, இன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினருடன் உதயநிதி ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். களத்தில் திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணப்பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார் இந்த கூட்டத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகள், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர-நகர-பகுதி-வட்டக் கழகச் செயலாளர்கள் பங்கேற்றவுள்ளனர்.