Deputy Chief Minister slams Vijay for questioning Ajith at karur stampede
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், இந்த துயரச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பும், தவெக தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில், கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பேற்க முடியாது என நடிகர் அஜித் குமார் தெரிவித்திருந்தார். இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அஜித் குமார், “கரூர் சம்பவத்திற்கு அந்தத் தனி நபரை மட்டுமே காரணம் என்று கூற முடியாது. நாம் அனைவருமே அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டும். ஊடகத்துக்கும் இதில் பங்கு இருக்கிறது. நமக்கான கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக கூட்டத்தைத் திரட்டுவதில் நாம் வெறி கொண்ட ஒரு சமூகமாக மாறியிருக்கிறோம். இது முடிவுக்கு வர வேண்டும்” என்று பேசினார்.
இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அஜித் குமார் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இதற்கு ஏற்கெனவே முதல்வர் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார்கள். நானும் ஏற்கெனவே தெளிவாக பேட்டி கொடுத்திருக்கிறேன். ஆனால், யார் பேட்டி கொடுக்க வேண்டுமோ அவரிடம் இன்னும் நீங்கள் பேட்டி முயற்சி எடுக்கவில்லையா?. இல்லை பேட்டி கொடுக்க விரும்பவில்லையா? சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றது. அதனால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. அஜித் சாருடைய பேட்டியை நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அதற்கு கருத்து கூற விரும்பவில்லை. அது சொன்னது அவருடைய சொந்த கருத்து, எந்த கருத்தாக இருந்தாலும் அது பாராட்டத்தக்கது” என்று கூறினார்.
Follow Us