ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால், சில இடங்களில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீர் தேங்கி நிற்பதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
அதனடிப்படையில், முதற்கட்டமாக, ஈரோடு மாநகராட்சி 32 வது வார்டுக்குட்பட்ட சங்கு நகரில், டெங்கு தடுப்புப் பணிகள் இன்று காலை நடைபெற்றது. இப்பணியை மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, கொசு மருந்து புகை அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தல் உள்ளிட்டவைகள் குறித்து டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார்.
மேலும், கழிவுப்பொருட்கள் எதுவும் கால்வாயில் தேங்கிக் கிடக்காத வகையில், அதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் கால்வாயில் இருந்து எடுக்கப்பட்டிருந்த கழிவுப் பொருட்களை காற்று அதிகம் அடிப்பதால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தூய்மை பணியாளர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.குறிப்பாக, டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, சுகாதார ஆய்வாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.