Demolished houses; stranded citizens Photograph: (home)
கர்நாடகாவில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்கும் பணியில் ஆளும் கட்சி, புல்டோசர் கலாச்சாரத்தை தொடர்வதாக இடதுசாரி முன்னணி குற்றச்சாட்டு. கடந்த டிசம்பர் 22 அன்று அதிகாலை 4 மணியளவில் கோகிலு கிராமத்தில் உள்ள ஃபகிர் காலனி மற்றும் வசீம் லேஅவுட்டில் நடந்த இந்த ஆக்கிரமிப்பு மீட்பு பணியில் வீடுகள் இடிக்கப்பட்டதில் 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் (BSWML) மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், 4 ஜேசிபி இயந்திரங்களும் 150-க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.
உருது அரசுப் பள்ளிக்கு அருகில் உள்ள ஏரிக்கு அருகே உள்ள பகுதியில் அரசு நிலத்தில் இந்த வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கர்நாடக அரசு கூறியுள்ளது. இருப்பினும் குடியிருப்பாளர்கள், தங்களுக்கு முன் அறிவிப்பு எதுவும் வழங்கப்படாத நிலையில், காவல்துறை தங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாகவும் கூறினர். இதனால், நூற்றுக்கணக்கானோர் கடும் குளிருக்கு மத்தியில் தெருக்களிலும் தற்காலிக முகாம்களிலும் தங்கி சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடியிருப்பு வாசிகள் இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருவதாகவும், அரசாங்கம் வழங்கியுள்ள ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவைகளும் தங்களிடம் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
புல்டோசர் கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸின் "சிறுபான்மையினருக்கு எதிரான அரசியலை" கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் " துரதிர்ஷ்டவசமாக, சங்க பரிவாரத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான அரசியல் தற்போது கர்நாடகாவில் ஒரு காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்சி பயம் மற்றும் கொடூரமான சக்தியின் மூலம் ஆளும்போது, அரசியலமைப்பு விழுமியங்களும் மனித மாண்பும் முதல் பலியாகின்றன," என்று கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, கேரள அமைச்சர் வி. சிவன்குட்டி, காங்கிரஸ் அரசாங்கத்தின் இந்த "மனிதாபிமானமற்ற செயல்" அவசரகால நிலையை நினைவூட்டுவதாக கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கர்நாடக அமைச்சர் சிவகுமார், "அது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடம். இந்த இடத்தை நில மாபியாக்கள் ஒரு சேரியாக மாற்ற விரும்புகின்றனர். நில மாஃபியா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் சேரிகளை நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை, பினராயி விஜயன் போன்ற மூத்த தலைவர்கள் பெங்களூருவில் உள்ள பிரச்சினைகளை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் நகரத்தை நாங்கள் நன்கு அறிவோம்" என்று கூறியுள்ளார்.
Follow Us