Advertisment

'அடக்குமுறை ஏவாமல் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

085

'Demands should be fulfilled without resorting to repression' - Anbumani insists Photograph: (pmk)

'ரூ.6750 ஓய்வூதியம் உள்ளிட்ட சத்துணவு பணியாளர்களின் 13 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்!'என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஓய்வூதியம் உயர்வு, பணிக்கொடை அதிகரிப்பு, முழு நேர அரசு ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் கூட்டமைப்பினர் தொடர்ந்து ஐந்தாம் நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, அவர்களை கைது செய்து ஒடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.

Advertisment

பகுதி நேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு முறையே ரூ.7,700, ரூ.4100, ரூ.3000 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஆகியோரை  முழுநேர நிரந்தரப் பணியாளர்களாக அறிவித்து காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும்; மாதம் ரூ.2000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படும் நிலையில் அதை ரூ.6750 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் பணியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வீதம் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 கோரிக்கைகளை சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், ஜனவரி 20&ஆம் தேதி மாநிலம் முழுவதும் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என்று திமுக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சத்துணவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஆனால், தமிழக சட்டப்பேரவையில் கடந்த 24&ஆம் தேதி, ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சத்துணவு ஊழியர்களின்  ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து ரூ. 3,400 ஆகவும், பணிக்கொடை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். தங்களின் கோரிக்கை மற்றும் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை விட குறைந்த ஓய்வூதியமும், பணிக்கொடையும் அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் 13 கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 3&ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஆனால், அவர்களுடன் அரசு இன்று வரை பேச்சு நடத்தவில்லை. மாறாக போராடும் பணியாளர்களை கைது செய்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு  வருகிறது.

செங்கல்பட்டு பகுதியில் போராட்டம் நடத்தி வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை நேற்று நான் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் கூறிய பல தகவல்கள் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தன. 30 ஆண்டுகளாக பணியாற்றும் சத்துணவு பணியாளர்களுக்குக் கூட இன்னும் கண்ணியமான  வாழ்க்கை நடத்துவதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்று அவர்கள் என்னிடம் வேதனையுடன்  தெரிவித்தனர். விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில், ரூ.7,700 அடிப்படை ஊதியத்தை வைத்துக் கொண்டு ஒருவரால் எவ்வாறு குடும்பம் நடத்த முடியும்? 30 ஆண்டுகள் பணியாற்றி  ஓய்வு பெறும் சத்துணவுப் பணியாளர்களுக்கு மாதம் ரூ.3400 ஓய்வூதிடம் எந்த வகையில் போதுமானது? என்ற அவர்களின் நியாயமான வினாக்களை திமுக அரசு மனித நேயத்துடன் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

இன்னொருபுறம் சத்துணவுப் பணியாளர்களின் போராட்டம் மாநிலம் முழுவதும் மாணவர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 43,038 சத்துணவு மையங்களில்  இப்போதைய நிலையில் 71,000 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 43 ஆயிரம் சத்துணவு மையங்களும் ஐந்தாம் நாளாக முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது; அதனால், அந்த மையங்களை நம்பியுள்ள 40.82 லட்சம் மாணவர்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும், குறிப்பாக சத்துணவுத் திட்டப் பயனாளிகளாக சேர்ந்திருக்கும் குழந்தைகள்  ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சத்துணவுத் திட்டத்தை நம்பியுள்ள அவர்களுக்கு உணவு கிடைக்காதது அவர்களின் கல்வியையும், உடல்நலத்தையும் கடுமையாக பாதிக்கும்.

எனவே, உரிமை கேட்டுப் போராடும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதை கைவிட்டு, அவர்களுடன் அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

anbumaniramadas pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe