தாம்பரம் – திருச்சி- தாம்பரம் ரயிலை அனைத்து  நாட்களும் இயங்கும் வகையில் நிரந்தர ரயிலாக அறிவிக்க வேண்டும் என கடலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி-தாம்பரம்.   சிதம்பரம், கடலூர் வழியாக இயக்கப்படும் சிறப்பு கட்டண ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு கட்டண ரயில் வண்டி எண் – 06190 கடந்த ஏப்ரல் 4-ம் தேதி முதல் மெயின் லை எனப்படும் மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் பகல் நேர ரயிலாக உள்ளதால் அனைத்து இருக்கைகளும் அமரும் இருக்கையாக உள்ளது. இதில்  10 முன்பதிவு பெட்டிகளும், 2 குளிர்சாதன வசதியுடன் கூடிய பெட்டிகளும், 8 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயங்கியது. காலை 5.35 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு நண் பகல் 12.30மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது. 
 மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. இந்த ரயில் வாரத்தில் திங்கள் கிழமை, வியாழன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இல்லாமல் மீத 5 நாட்களும் இயங்கு கிறது. இதன் மூலம் பண்ருட்டி, கடலூர், சிதம்பரம் பகுதி மக்களும், வணிகர்களும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். 

Advertisment

காலை 8.10 மணிக்கு சிதம்பரத்தில் இருந்தும், 8.55-க்கு கடலூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்று, மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு சிதம்பரம் வருகின்றனர்.  இதேபோல் கடலூர், பண்ருட்டி பகுதி மக்களும்  3 மணி நேரத்தில்  சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். இது வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த ரயில் மாலையில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுவதால்  பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த பயணிகள் இதில் வந்து விடுகிறார்கள். இதனால் இதற்கு பின்னால் சென்னை எழும்பூரில் இருந்து 4 மணிக்கு புறப்படும் திருச்செந்தூர் விரைவு ரயிலில் சிறிது கூட்டம் குறைந்து வருவதாகவும் பயணிகள் கூறுகிறார்கள். 

Advertisment

இந்நிலையில் இந்த ரயில் தற்காலிக ரயிலாக ஒவ்வொரு மாதமும் நீட்டிப்பு செய்து வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் ரயிலை ஜனவரி 2026 வரை மட்டும் இயங்கும் என்று தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது கடலூர் மாவட்டத்தில் இருந்து ஓரே நாளில் சென்னை சென்று திரும்பும் வணிகர்கள், பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ரயிலை  பொதுமக்கள் அதிகளவில் திருச்சி மற்றும் தாம்பரம் செல்வதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த ரயிலை தொடர்ந்து நிரந்தர ரயிலாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் கடலூர் மாவட்ட மக்கள், வணிகர்கள் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் சிதம்பரம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் அப்துல் ரியாஸ், சிவராம வீரப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் தாம்பரம்- திருச்சி சிறப்பு கட்டண ரயிலை நிரந்தர ரயிலாக அறிவித்து வாரத்தின் எல்லா நாட்களும் இயக்க வேண்டும், 

கோயம்புத்தூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயக்கப்படும் ஜன்சதாப்தி(12083-84) ரயிலை சிதம்பரம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். காரைக்கால்-எழும்பூர்-காரைகால் வரை இயக்கப்படும் கம்பன் ரயிலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து சம்பந்தபட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்து மனு அளித்து வருகிறார்கள். பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றுமா?