'நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி!' என எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த விடியா திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது.

Advertisment

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த, விவசாயிகள் பார்த்துப் பார்த்து விளைவித்த நெல்மணிகள் எல்லாம் தற்போது பெய்து வரும் மழையில் முளைத்து விவசாயிகள் கண் முன்னே வீணாகிறது. நெல் கொள்முதலில் ஃபெயிலர் மாடல் திமுக அரசின் குளறுபடியால், நெல்மணிகள் மழையில் நனைந்து முளைவிட்டுள்ளன.

கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்குவதில் சிக்கல், உரத் தட்டுப்பாடு, காலநிலை மாற்றத்தால் காலம் தவறிப் பெய்யும் மழை என்று பல்வேறு சவால்களைக் கடந்து விவசாயிகள் நெல்மணிகளை உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், அந்த நெல்மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யக்கூட வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் நாள் ஒன்றுக்கு 800 மூட்டையாக இருந்த நெல் கொள்முதல், அஇஅதிமுக ஆட்சியில் 1000 மூட்டையாக அதிகரித்தும்; 17 சதவீதம் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி, மத்திய அரசிடமிருந்து ஆணை பெற்றும் நெல்மணிகளை கொள்முதல் செய்தோம்.ஆனால், ஸ்டாலின் மாடல் ஆட்சியில் நாளொன்றுக்கு 600 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும், நெல்லைப் பிடிக்க போதுமான சாக்குப் பைகள் இல்லை

Advertisment

என்றும், நெல்லைப் பாதுகாக்க தார்ப்பாய்கள் இல்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு, ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், நெல் கொள்முதலை 1000 மூட்டைகளாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதையடுத்து பருவமழைக்கு முன்னதாகவே விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று, அஇஅதிமுக சார்பில் பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். அதையெல்லாம் திமுக அரசு காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. இதனால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை நெல்மணிகளை கொட்டிவைத்து விடியலுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் விவசாயிகள். நெல் மூட்டைகளை மழையிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான தார்ப்பாய்களைக்கூட விடியா திமுக அரசு கொடுக்கவில்லை. எனவே, மழையில் நனைந்து நெல்மணிகள் வீணாகும் கொடுமையையும், விவசாயிகளின் கண்ணீரையும் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் நேரலையாகக் காட்டிய பிறகும், இந்த தீயசக்தி திமுக அரசுக்கு இரக்கம் பிறக்கவில்லை.

சட்டமன்றத்தில் இது தொடர்பாக நான் இரண்டு நாட்களுக்கு முன்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தபோது, அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ் நாட்டில் 25 இடங்களில் திறந்த வெளி சேமிப்புக் கிடங்குகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது, ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது..." என்று சமாளிக்கிறாரே தவிர, முழுமையாக நெல்மணிகள் கொள்முதல் செய்வதற்கும், உரிய முறையில் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இப்போதே 22 சதவீத ஈரப்பத நெல்மணிகளை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்கலாமா என்று அமைச்சர் கேட்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. ஏனென்றால், இப்போதே பருவ மழை தொடங்கி அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் ரோட்டில் கிடக்கிறது, அறுவடைக்குத் தயாரான நெல்மணிகள், தண்ணீரில் மிதக்கின்றன. எனவே, இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தமே இல்லை.

மேலும், "செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்றுத் தந்தால் நெல் தேங்கும் நிலை ஏற்படாது. அரிசி பதுக்கல் இருக்காது..." என்று உண்மைக்கு மாறாக மத்திய அரசு மீது பழி சுமத்தியிருக்கிறார். உண்மை என்னவென்றால் கடந்த ஆகஸ்ட் 18 அன்றே மத்திய அரசு இதற்கான அனுமதி வழங்கிவிட்டது. இதை மறைத்து, மத்திய அரசு மீது குற்றம் சாட்டி விவசாயிகளையும் மக்களையும் ஏமாற்றுகிறது இந்த விடியா அரசு.

தமிழகத்தில் நெல் விளைச்சல் இந்த ஆண்டு அதிகம் என்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சருக்கு, அதுபற்றி முன்பே தெரியாதா? விவசாயம் பற்றியும், ஒவ்வொரு பருவத்திலும் எந்த அளவுக்கு விளைச்சல் இருக்கும், இந்த ஆண்டு எவ்வளவு அதிகம் விளையும் என்பதைக்கூட கணிக்கமுடியாத ஒருவர், அமைச்சராக இருப்பதற்குத் தகுதி இருக்கிறதா..?நெல் விளைச்சல் அதிகம் என்றால் அதற்கு ஏற்ப முன்கூட்டியே கொள்முதல் தொடங்கியிருக்க வேண்டாமா.. ? தேவையான அளவு கிடங்குகளை தயார் செய்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் மழையில் நனையாமல் பாதுகாப்பதற்கு தார்ப்பாய் போன்ற அடிப்படை வசதிகளையாவது செய்து கொடுத்திருக்க வேண்டாமா?

இவை எதையும் செய்யாமல், போட்டோஷூட் நடத்துவதற்கும், புதுப்புது பெயர் சூட்டுவதற்கும் மெனக்கெடுவதால் மட்டும் விவசாயிகளின் துயரம் தீர்ந்துவிடுமா..?பருவமழை தீவிரமாகியிருப்பதால் விவசாயிகளின் துன்பம் இரட்டிப்பாகிவிட்டது. டெல்டா மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள். டெல்டா மாவட்டத்தில் மட்டும் பல ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகிப் போவதுடன் சுமார் 30 லட்சம் மூட்டை நெல்மணிகள் கொள்முதல் செய்யாமல் சாலையில் குவித்து வைத்து மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்திருக்கிறார்கள்.

நாகையில் தொடர் மழை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல் வீணாகி வருகிறது. இதைக் கண்டு விவசாயிகள் தமிழகம் முழுக்க சாலை மறியல், பஸ் மறியல் செய்யும் காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.மதுரை மாவட்டத்தில் 41 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கடந்த செப்டம்பர் மாதமே திறப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டும், இதுவரை ஒரு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தைக் கூட திறக்கவில்லை.பருவ மழைக்கு முன்பாக தப்பித்துவிடலாம், தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடலாம் என்று ஆசையோடு காத்திருந்த விவசாயிகள், இப்போது போட்ட முதல் பணத்தைக் கூட எடுக்க முடியாமல் கண்ணீர் சிந்துகிறார்கள். தங்கள் வாழ்க்கையிலே இதுதான் இருண்ட தீபாவளி என்று விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுவரை மட்டும் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவிக்கிறது. தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடியால் இந்த எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிக்கும் அபாயம் தென்படுகிறது.எனவே, அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதோடு, அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில் செய்ததைப் போன்று தினமும் ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்; விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை மழையில் இருந்து பாதுகாக்கத் தேவையான தார்ப்பாய்களை வழங்கிட வேண்டும் என்றும், விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

விடியா தி.மு.க. அரசு, விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட நெல்மணிகளை கொள்முதல் செய்யாததால் விவசாயிகளிடத்தில் மிகப் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, மாபெரும் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.