புத்தாண்டு வரவுள்ளதையொட்டி மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது குற்றங்கள் நிகழாமல் இருக்க சில நாட்களுக்கு முன்பு டெல்லி காவல்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இதன் விளைவாக ஏற்கனவே குற்றம் செய்த நபர்கள், குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ள நபர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட செல்போன்கள் உட்பட பல விலையுயர்ந்த பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் வாகனங்களை கைப்பற்றியதோடு சில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 26 அன்று இரவு 10.44 மணியளவில், சில கார்கள் ஐடிஓ பகுதியிலிருந்து சராய் காலே கான் மற்றும் நொய்டாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்த கார்கள் சென்ற வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பின்பு அது வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கார்கள் நள்ளிரவில் ரிங் ரோட்டில் பந்தயத்தில் ஈடுபட்டு, பாதைகளுக்கு இடையில் தாறுமாறாகச் சென்று, மற்ற வாகனங்களுக்கு இடையே குறுக்குமறுக்காக ஓட்டிச் செல்வது காணப்பட்டது .இது மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஒரு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது, பிறருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது, சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறியது போன்ற குற்றங்களின் கீழ், கார் பந்தயத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களான டெல்லியைச் சேர்ந்த அல்மாஸ் அர்ஷத் (20), சர்பராஜ் (26), முகமது இம்ரான் குரேஷி (23), முகமது ஷபீர் (23) மற்றும் சாத் அப்துல்லா (22) என ஐந்து நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இவர்களுடன் சேர்த்து 4 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து காவல்துறை அதிகாரி பேசுகையில், ‘போக்குவரத்து விதிகள் மற்றும் சாலைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது அனைவருக்கும் அவசியம். விதி மீறல்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதுபோன்ற நடத்தைகள் குறித்து அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது 112 என்ற அவசர எண்ணிலோ உடனடியாகத் தெரிவிக்கலாம் என்று மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிவேக கார்களில் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது, அவர்களுக்கு மட்டுமின்றி சக பயணர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் புரிந்து செயல்படுவது அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என மக்கள் கூறுகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/29/car-2025-12-29-13-17-38.jpg)