டெல்லியில் ஆட்சி செய்த ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இக்கொள்கையின்படி, மது விற்பனையில் இருந்து அரசு விலகி, 849 கடைகளை நடத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என்றும், சட்டவிரோத மது விற்பனையாளர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் ஆம் ஆத்மி அரசு கூறியது. இருப்பினு, இதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு (Delhi Excise Policy Case) எனப் பரவலாகத் தேசிய அளவில் பேசப்பட்டது.
அதாவது இக்கொள்கையை வகுப்பதில் நடைமுறை மீறல்கள் இருந்ததாகவும், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டு ரூ. 580 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் டெல்லி தலைமைச் செயலாளர் 2022ஆம் ஆண்டுஜூலை மாதம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். இப்புகாரை அடுத்து துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவின் பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை (மோசடி) தொடர்பாக வழக்கைப் பதிவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கில் அப்போதைய டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், அப்போதைய பி.ஆர்.எஸ். கட்சித் தலைவராக இருந்த கவிதா மற்றும் அப்போதைய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம், சி.பி.ஐ. தொடர்ந்த ஊழல் வழக்கில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கவிதா உள்ளிட்ட 23 பேரையும் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் எந்தவிதமான குற்றத்திற்கான சதியோ, அதற்கான எண்ணமோ இல்லை என்றும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் நீதிபதி ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/arvind-kejrwal-pm-1-2026-02-27-12-06-04.jpg)
இந்நிலையில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் பேசுகையில், "நான் ஊழல்வாதி அல்ல. கெஜ்ரிவாலும் மணீஷ் சிசோடியாவும் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது. உண்மை எப்போதும் வெல்லும் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வந்தோம். இந்திய நீதித்துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க (மத்திய உள்துறை அமைச்சர்) அமித்ஷாவும், (பிரதமர்) மோடியும் இணைந்து மிகப்பெரிய அரசியல் சதியை தீட்டினர். கட்சியின் 5 முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பதவியில் இருந்த முதல்வர் அவரது வீட்டிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கெஜ்ரிவால் ஊழல்வாதி அல்ல. என் வாழ்க்கையில் நான் நேர்மையை மட்டுமே சம்பாதித்துள்ளேன். கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் நேர்மையானவர்கள் என்று நீதிமன்றம் இன்று கூறியுள்ளது”என்றார்
Follow Us