பெற்றோரால் கணவர் கைவிடப்பட்டாலும், கணவர் வீட்டில் வசிக்க மனைவிக்கு உரிமை உண்டு என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஒரு தம்பதியருக்கு கடந்த 2010ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில், கணவருக்கும் மாமியாருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியரை வீட்டை விட்டு வெளியேறு கூறியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த பெண் மாமியார் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார். இதனால் அந்த பெண்ணுக்கும், மாமியாருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மாமியார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி சஞ்சீவ் நருலா அமர்வு முன்பு கடந்த 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காஜல் சந்திரா, இந்த சொத்து பெண்ணின் மறைந்த மாமனார் சுயமாக சம்பாதித்த சொத்து என்றும், எனவே குடும்ப வன்முறையில் இருந்து பெண்கள் பாதுகாப்புச சட்டத்தின் கீழ் பகிரப்பட்ட குடும்பமாகக் கருத முடியாது என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, “திருமணத்திற்குப் பிறகு மாமியார் வீட்டில் வசிக்கும் மனைவியுடைய குடும்பம் தான் அது. பெற்றோரால் கணவர் கைவிடப்பட்டாலும், அங்கு வசிக்க மனைவிக்கு உரிமை உண்டு. எனவே, மாமியார் முதல் தளத்திலும், மருமகள் தரை தளத்திலும் வசிக்கலாம். இந்த ஏற்பாடு இரு தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது” என்று மாமியார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.