பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பீகார் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் தற்போது நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தள் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்வரும் தேர்தலில் இதே தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்கிறது.
மறுபுறம், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என்று பீகார் தேர்தல் களத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தள் மற்றும் பாஜகவிற்கு தலா 101 தொகுதிகளும், சிராக் பாஸ்வானின் லோக் ஜன் சக்தி கட்சிக்கு 29 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சாவுக்கு தலா ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்த தேர்தல் நடவடிக்கைகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டு, வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், மறுபுறத்தில் மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் இழுப்பறி நீடித்து வருகிறது. கூட்டணித் தலைவர்கள் கூடிப் பேசி ஆலோசனை நடத்தி வருகின்றனர். எப்படியாவது மாநிலத்தில் இழந்த ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று லாலு பிரசாத் தனது மகன் தேஜஸ்வி யாதவ் மூலம் காய்களை நகர்த்தி வருகிறார். இந்த நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்து வந்தார். அப்போது, ஜார்க்கண்டின் ராஞ்சி மற்றும் ஒடிசாவின் புரியில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் ஓட்டல்களைப் பராமரிக்கும் ஒப்பந்தம் முறைகேடான வழியில் சுஜாதா ஓட்டல் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக பினாமி நிறுவனம் மூலம் 3 ஏக்கர் நிலத்தை லாலு பெற்றதாக சி.பி.ஐ. கூறியுள்ளது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணை 13-ஆம் தேதி வந்தபோது, டெல்லி சிறப்பு நீதிமன்றம், தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தி ஒப்பந்தத்தில் முறைகேடு செய்து, பிரதிபலனாக லாலு பிரசாத் யாதவ் நிலங்களை வாங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் அவரது குடும்பத்திற்கு பங்கு இருப்பது தெளிவாகியுள்ளது. அதனால், லாலு பிரசாத் மீது ஊழல், கிரிமினல் சதி மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அத்துடன், லாலுவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்துள்ளது. மேலும் 27 ஆம் தேதியில் இருந்து இந்த வழக்கில் தினசரி விசாரனை நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறது.
ஆனால், முற்றிலுமாக இதனை மறுத்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர், வேண்டுமென்றே எங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிச்சயம் இதனை நாங்கள் நீதிமன்றத்தின் மூலமாக எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மகாகத்பந்தன் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.