தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, கடந்த 10ஆம் தேதி (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு காரில் இருந்த வெடிகுண்டுகளே காரணம் என டெல்லி போலீசார் உறுதிப்படுத்தியிருந்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மருத்துவர்கள் சுமார் 3 கார்களை வாங்கி இருப்பதாகவும் அந்த கார்களை பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் வெடிக்க வைத்து சேதங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தான் 2வது கார் பரிதாபாத்தில் உமர் நம்பி வசித்து வந்த இடத்திற்கு அருகே உள்ள அல்பலாத் பல்கலைக்கழகத்திற்குள்ளே கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இந்த கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் பயன்படுத்தப்பட்ட 3வது கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கார் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அந்த காருக்குள் ஏதேனும் வெடிபொருட்களை அவர்கள் எடுத்துச் சென்றிருக்கிறார்களா? என்ற கோணத்திலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. முன்னதாக கார் குண்டுவெடிப்பு குற்றவாளியின் புதிய சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் கார் குண்டு வெடித்த இடத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அசிஃப் அலி சாலையில் உமர் நபி நடந்து சென்ற காட்சிப் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us