தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று முன்தினம் (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் கார் வெடிப்பு வழக்கைத் தேசிய புலனாய்வு முகமையிடம் (N.I.A. - National Investigation Agency) நேற்று (11.11.2025) உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இதனையடுத்து டெல்லி காவல்துறை அதிகாரிகள் தங்கள் வசம் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆவணங்கள் என அனைத்து ஆதாரங்களையும் நேற்று தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்தனர். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாகச் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (Unlawful Activities (Prevention) Act - UAPA) டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அதோடு பி.என்.எஸ். (BNS) வெடிபொருட்கள் சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் கார் வெடிப்பு வெடிப்பு சம்பவத்தை விசாரிக்க 10 பேர் கொண்ட மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து 10 பேரும் செங்கோட்டைப் பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணை தொடங்க உள்ளனர். மேலும் இந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களில் 6 பேரின் உடல்களைப் பச்சை குத்தியதை வைத்து, அவரது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/12/dl-car-ins-file-1-2025-11-12-12-13-14.jpg)
மேலும் முகம் மற்றும் உடல் சிதைந்ததால் பிற அடையாளங்களை வைத்தும் யார் என உறவினர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் உயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கார் வெடிப்பின் போது அங்கிருந்தவர்களின் நுரையீரல், செவிப்பறைகள் உள்ளிட்ட உடலின் மிகவும் மென்மையான உறுப்புகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Follow Us